பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

உலக நாடுகளில் உருவான பத்திரிக்கை வளர்ச்சிகள்


சிங்கர் புகழின் சிகரத்துக்கே சென்றமர்ந்தார். அந்த நாவலில் 19ம் நூற்றாண்டில் வாழும் நான்கு தலைமுறைக் குடும்பத்தினுடைய நிகழ்ச்சிகளை விடாமல் தொடர்ந்து எழுதினார்.

அந்த நூல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்ததால் அது உலகப் புகழைப் பெற்றது. உலகப் படைப்பாளிகளில் ஒருவராக ஐசக் பஷீவாஸ் சிங்கர் மதிக்கப்பட்டதால், அவருக்கு 1978-ஆம் ஆண்டின் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

யூத மொழி பத்திரிகை எழுத்தாளர் ஒருவர் நோபல் பரிசு பெற்றதில் முதன்மையானவர் சிங்கரே என்ற பெருமையை அவர் பெற்றார்.

இலத்தீன் அமெரிக்கா
பத்திரிகையாளர்

இலத்தீன் அமெரிக்காவில் உள்ள கொலம்பியாவின் ஒரு கிராமத்தில் கார்சியா மார்க்கெஸ் என்ற பத்திரிகையாளர் 3.6.1928-ஆம் ஆண்டில் பிறந்தார். வறுமையே உருவான பரம ஏழைக் குடும்பத்தில் தோன்றிய அவர், அரும்பாடுபட்டு, யார்யார் உதவிகளினாலோ சட்டத்துறையிலும், பத்திரிகைத் துறையிலும் படித்துப் பட்டம் பெற்ற ஏழையில் ஏழ்மையானவர் ஆவார்.

மார்க்கெஸ் பத்திரிகைத் துறையைத் தனது வாழ்க்கைத் துறையாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். ‘எல் எஸ்பெக்ட்டார்’ எனும் நாளிதழ் பத்திரிகையில் நிருபராகப் பணி புரிந்தார். 1959-ஆம் ஆண்டு முதல் 1961 வரையிலும் கொலம்பியா கியூபின் நியூஸ் ஏஜென்சியில் வேலை செய்தார். அதே நேரத்தில் திரைப்படத் துறையிலும் திரைக்கதைத் துறையிலும் பணியாற்றினார்.

ஆனால், பத்திரிகைத் துறையில் தான் அவர் முழு மூச்சாக செயல்பட்டார். 1940-ஆம் ஆண்டில் பத்திரிகைகளில் சிறுகதைகள் எழுதி வந்தார். 1955-ஆம் ஆண்டில் ‘இலைப் புயல்’ என்ற பெயரில் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார்.