பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

81


நிறுத்தம், வெளிநாடுகளுக்கு இராஜ தந்திரிகளைத் தூதுவர்களாக நியமிக்கும் அம்பாசிட்டர் (Ambassador), சமயங்களை வளர்க்கும் மாநாடுகள் என்பவை; தற்காலத்தில் மாறி, அரசியல் கட்சிகள் மாநாடுகளாக அவை அனைத்தும் இன்றும் நடைபெற்று வருகின்றன.

அசோக மாமன்னரால் நிறுவப்பட்ட புத்த சமய நினைவுச் சின்னங்களான சாஞ்சி, சாரநாத், பாஹீத் மற்றும் அமராவதி கற்றூண்கள் போன்றவை ஆகும். அவரது மூன்று சிங்கங்கள் சின்னத்தைத்தான் இன்றைய இந்திய அரசும் அசோகச் சின்னமாகப் போற்றி அரசுச் சின்னமாக வைத்து வழிபடுகின்றது.

இன்றைய இந்திய ஆட்சிக்கு அசோகர் செய்திகள் மூலகங்களாகப் பயன்படுவதைப் போல, இந்திய இதழியலுக்கும் அவரது கல்வெட்டுகள் மூலகங்களாக, முன்னோடிச் செய்திகளாக இருக்கின்றன எனலாம். அவரது கல்வெட்டுகள் காலத்தால் அழிக்க முடியாத இதழ்களாக நிலைத்து நின்றுள்ளன.

இந்திய மன்னர்களான சுங்க வம்சக் காலத்திலும், மெளரிய சாம்ராச்சிய ஆட்சியிலும், கனிஷ்க, குப்த, ஹர்ஷவர்த்தனர் அரசுகளிலும், கலிங்க, சாளுக்கிய நாடுகளிலும், மொகலாய ஆட்சிகளிலும், தெற்கே பல்லவ, சோழ, பாண்டிய, சேரர்கள் ஆட்சிகளிலும் கல்வெட்டுகள், அரண்மனைகளின் செய்தி அனுப்புவோர் வாயிலாகவும், மன்னர்களது முரசு கொட்டிகளின் பிரகடனங்கள் மூலமாகவும், அலுவலர்களுக்கும் பிற அரசர்களுக்கும், பொது மக்களுக்கும் செய்திகளைப் பரப்பும் வசதிகளை உருவாக்கிக் கொண்டதாக அந்தந்த அரசு வரலாறுகள் அறிவிக்கின்றன.

இன்றைக்கும்கூட ஒரிசா நாட்டில் புறாக்கள் மூலமாகச் செய்திகளை அனுப்பும் வசதிகள் இருப்பதை நாம் அறிகிறோம். இந்தச் செய்திகளை அனுப்பும் ஓலைகளே, லிகிதங்களே, கடிதங்களே இன்றையப் பத்திரிகைகள் செய்திகளுக்குக் கருக்கூறுகளாக அமைந்துள்ளன.