பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/94

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

இந்தியாவில் - இதழியல் கலை! தோற்றம்! வளர்ச்சி! தொண்டு!



இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் தலைமை நிர்வாகம், கிழக்கிந்தியக் கம்பெனியின் நிர்வாகங்கள் அந்தந்த மாநிலத் தலைநகரங்களிலே இயங்கி வந்தன. பெங்கால் ஸ்டேட்டுக்கு அதன் தலைநகர் கல்கத்தாவிலும், பாம்பே ஸ்டேட்டுக்கு அதன் தலைநகரமான பாம்பேயிலும், மெட்ராஸ் ஸ்டேட்டுக்கு அதன் தலைநகரான சென்னை மாநகரிலும் அதனதன் கிழக்கு இந்தியக் கம்பெனி நிர்வாகங்கள் மூலமாக நடந்து வந்தன என்பதும் குறிப்பிடத்தக்க அரசியல் வரலாறாகும்.

பெங்கால் ஸ்டேட்டில் இருந்து வெளி வந்த பத்திரிகையாளர்கள் யார் யார் என்பதையும், பத்திரிகைகளின் பெயர்களையும், அதனதன் பண்புகளையும் படித்தீர்கள். இவர்களுள் ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி என்பவர் ஒருவர்தான் பத்திரிகையாளர் ஆண்மகனாகத் திகழ்ந்து தண்டனைகளையும், அபராதத் தொகைகளையும் கட்டி, ‘ஆட்சி எதிர்ப்பு’ என்ற தனது இலட்சியத்திற்காக இதழியல் துறையைத் திசை திருப்பும் கலங்கரை விளக்கமாக விளங்கினார். மற்ற எல்லாப் பத்திரிகையாளர்களும் கிழக்கிந்தியக் கம்பெனியின் நிர்வாகப் பிழைப்பெனும் பஜனைக்குரிய ஜால்ராக்களாகவே திகழ்ந்தார்கள்.

பம்பாய் மாநில
பத்திரிகைகள்

மராட்டிய மாநிலத்தின் முதல் இதழாக, பம்பாய் மாநகரிலிருந்து ‘பம்பாய் ஹெரால்டு’ (Bombay Herald) என்ற பத்திரிகை 1789-ஆம் ஆண்டில் வெளி வந்தது. அடுத்தபடியாக 1790-ஆம் ஆண்டில் ‘பம்பாய் கூரியர்’ (Bombay Courier) என்ற இதழை; லூக் ஆஸ்பர்னர் என்பவர் வெளியிட்டார்.

பத்திரிகைகளுக்கு
ஒழுங்கு முறைச் சட்டம்

வங்காள மாநிலத்திலேயே, கிழக்கிந்தியக் கம்பெனியின் நிர்வாக ஒழுங்கை எதிர்த்தும், ஆதரித்தும் பத்திரிகைகள் சில வெளிவந்தன. அரசை எதிர்க்கும் பத்திரிகைகளை விட, ஆதரிக்கும் பத்திரிகைகளே அதிகமாக வெளி வந்தன.

கி.பி. 1790-ஆம் ஆண்டிற்குப் பின்பு ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் அவரவர் தாய்மொழிகளில் பத்திரிகைகள்