பக்கம்:இதழ்கள்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

189

இதழ்கள் 189

வாயிற் கதவை மூடக்கூட உஷை கவலைப்படவில்லை. அவள் இப்பொழுது எந்தக் கவலையும் படவில்லை. அவளுக்கே காற்றில் மிதப்பதுபோல் இருந்தது. தங்கமாய்த் தகதகக்க கோபுரத்தில் பித்தளை ஸ்தூபி யின் மேல் ஒரு கிளி கீச்சுக் கீச்சென்றது. நந்தவனத்தில் பூக்களும் செடிகளும் தங்கள் பளிச்சென்ற முகங்களை ஆட்டி அவளை வரவேற்றன. ஆனால் உஷை எதையும் கவனிக்க வில்லை. இன்னும் ஒருவரும் சுவாமி தரிசனத்துக்கு வரவில்லை. காற்றில் அலைந்த நெற்றி மயிரை ஒதுக்கிக் கொண்டு உஷை அரசமரத்து மேடைமேல் ஏறினாள். மரத் தடியில் பாம்புப் புற்றுத் தொடர்கள் இடுப்பளவு உயரத்துக்கு ஓங்கி நின்றன. அவற்றுள் ஒன்றில் விரலை வைத்துவிட்டாள். கைபட்டதும் மண் பிசுபிசுவென உதிர்ந்தது. அப் பொழுதுதான், அப்புறந்தான், அவள் இழைத்த செய்கையின் பிரக்ஞை வந்தது. ஆனால் விரலை எடுக்க முடியவில்லை. விர்விர்ர்ரென்று மின்சார வேகங்கள் அலைமோதி உடலை ஊடுருவின. குபுக் குபுக் கென்று அடிவயிற்றை மீண்டும் மீண்டும் சுருட்டுகையில் நெஞ்சில் ஒரு புதுவிதமான களிப்பு மதமதத்து அவளைப் பரவசத்தில் அழுத்தியது. உயிருக்கும் சாவுக்கும் இடையில் எல்லைக் கோட்டின்மேல் நின்றால் இப்படித்தான் இருக்குமா? இனி என்ன நேரப்போகிறது? ‘என்ன ஆச்சரியம்: எலிக்குப் பயப்படும் எனக்குப் புற்றில் கை வைக்கும் வேளைகூட வந்துவிட்டது. பார்த்தாயா? ஒஹோ, அம்மா சொன்ன வேளையும் இதுதானோ? இதுதான் அம்மா குறித்த தைரியமோ? நீ ஏன் என்னைக் கடிக்க இன்னும் வரவில்லை? எங்கே ஒளிந்து கொண்டிருக் கிறாய்? ‘என் கிட்ட உனக்குப் பயமா? உன் புற்றில் விரலை வைக்கும் என் தைரியமும் என்னைக் கடிக்க உன் பயமும் இரண்டுமே ஒன்றுதானா? அம்மா சொன்னாரே, எல்லாமே குறித்த அந்த ஒன்றில் சேர்ந்ததோ, என் தைரியமும் உன் பயமும்? 'வா வா, நீ என் குழந்தை; இல்லாவிட்டால் நான் உன் குழந்தை. எனக்கு உன் மேல் ஆசையே ஏற்படுகிறது. வா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/189&oldid=1247287" இலிருந்து மீள்விக்கப்பட்டது