பக்கம்:இதழ்கள்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூ

நினைவின் அடிவாரத்தில் இக்கதைகள் கருவூன்றும் நெஞ்சக் கிளர்ச்சியாக முதன் முதலாய் நான் உணர்ந்தது, குழந்தையின் கன்ன மிருதுவும், குஞ்சுக் கைகளின் பஞ்சும், கொழ கொழ உடலின் மெத்தும், தொடைகளின் அடிச் சதையின் பூ நயமும்தான். அவையும்தானோ இவைகளுக்கு இதழ்கள் எனும் பொதுத் தலைப்பும் நேர்ந்தது.

இக்கதைகள் முழுக்க முழுக்கக் குழந்தைகளைப் பற்றியே இருக்கவேண்டும் என என் ஆரம்ப அவா. ஆனால் காரியத்தை மேற்கொண்ட பின்னரே அது எவ்வளவு எட்டாக் கனியெனத் தெரிந்தது. வயதுவாக்கில் உப்பும் ஜலமும் உடலில் ஊற ஊற, கோபதாபங்களும், நானாய் இழைக்கும் தவறுகளும், பிறர் கண்டுபிடிக்கும் குற்றங்களும் நெஞ்சை விஷமாக்கி, என் கன்னித் தன்மையையும் இழந்தபின், குழந்தைகளின் உலகில் என்னால் எப்படிப் புகமுடியும்?

ஆயினும் என் அவாவின் சாயைகளாய், இக்கதைகளின் இடையிடையே குழந்தைகளும் குழந்தைகளைப் பற்றிய எண்ணங்களும் நடமாடுகின்றன. சில இடங்களில் வெளிச்சமாய் உலாவுகின்றன; சில இடங்களில் வெறும் நிழலாட்டமே நடுங்குகிறது; பல இடங்களில், துருவன் எவர்க்கும் எட்டாத் தன் நக்ஷத்திர பதவியினின்று பூக்கும் புன்னகை என்னைத் திகைக்க அடித்துத் திகைப்பூண்டில் தள்ளுகிறது.

ஆனால் எழுதிக்கொண்டே வருகையில் வேறும் சில நேர்ந்தன.

‘நான் குழந்தையா யிருந்தேனே!’ எனும் ஏக்கம் கொஞ்சம் கொஞ்சமாய் ‘நானும் ஒரு நாள் குழந்தையாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/5&oldid=1394122" இலிருந்து மீள்விக்கப்பட்டது