பக்கம்:இதழ்கள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

செல்கையில் சோழிப்பற்கள் தெரியச் சிரித்த குழந்தை அவளேயா இவள், தானே தாயாய், தன் பாஷையில் மலர்களைக் கொட்டிக்கொண்டு, எனக்குப் பாடம் படிப்பிக்கின்றாள் நினைக்கையிலே உவகை பூக்கிறது. மனம் மணக்கிறது. என் வாணாள் முற்றிலும் வீணாள் ஆகவில்லையெனத் தெளிவு மலர்கிறது.

சென்ற மாதம் சேகர் ஆஸ்பத்திரியில் கிடந்தான். சுவாசப் பைகளில் ஜளி உராய்ந்து, குழந்தை மூச்சுவிட முடியாது, பிராண வாயுவை மூக்கில் குழாய் மூலம் செலுத்தியாகிறது. அவன் அசையாதபடி அவன் கரங்களை நான் பிடித்துக்கொண்டிருக்கிறேன். என் மனைவி, சிறகுகளை விரித்த கோழிபோல், கட்டிலைச் சுற்றிச் சுற்றி வந்து, தாய்மையில் தவிக்கிறாள். குழந்தையின் அந்நிலைமையில் அவனை அனைத்துக்கொள்ள முடியாதாகையால், தன் மார்பிலிருந்து ஒரு ஒரு ஸ்பூனாய்ப் பாலைக் கறந்து அவன் வாயுள் ஊற்றுகிறாள். அவள் மறு ஸ்பூனில் கறக்கும் வரை குழந்தைக்கு அவசரம் தாங்கவில்லை. இலைபோல் தளிர் நாக்கை நீட்டிக் காட்டி ‘ஆ ஆ’ என்கிறான். அக்காட்சி நெஞ்சைப் பிழியும் அப்பவே என் குழந்தையின் அருமை என் நெஞ்சில் இதழ் விரிகின்றது—என்ன சொன்னேன்? பூத்தேனா, மனத்தேனா, மலர்த்தேனா, விரிந்தேனா? ஓ, விஷயமே இதுதானா ! விஷயத்தின் விஷயம். நெஞ்சின் மலர்ச்சி, மலரின் நெஞ்சம், பிறர் மணம் என்மேல் வீசியதே காரணம்தான் என் மலர்ச்சியா?

ஆனால் நான் பூவல்ல, இதழ்; இதழுமில்லை: பூவோடு சேர்ந்த நார். இதை இப்போது, அல்லது இம்மாதிரி சமயங்களில், அறிந்து கொள்ள முடிந்தவரை அறிந்து கொண்டதே என் செருக்கு. என் செருக்கே என் மலர்ச்சி. இது இளமையின் புது மலர்ச்சியல்ல; முதுமையின் மறுமலர்ச்சி. புற இதழுள், அக இதழ் இம்முறையில் எல்லோரும் இதழ்களே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/7&oldid=1394124" இலிருந்து மீள்விக்கப்பட்டது