பக்கம்:இதுதான் திராவிடநாடு.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

இதுதான் திராவிடநாடு

சங்க இலக்கியமும், சிலம்பு மேகலைகளும், தொல்காப்பியமும் காட்டுகின்றன, இரண்டாயிரத்தைந் நூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகத்தின் தென் எல்லை குமரிமுனையல்ல என்பதை! திருந்திய தமிழ் பேசப்பட்ட தமிழ் நல்உலகு அல்லது செந்தமிழ் நிலமே வடக்கே வேங்கட முதல் தெற்கே குமரியாறு வரை பரந்து கிடந்தது என்று அறிகிறோம். செந்தமிழகத்திற்கு வடக்கேயும் தமிழகம் விந்தம்வரை பரவியிருந்தது போல, குமரியாற்றுக்குத் தெற்கேயும் தமிழகம் பரவியிருந்தது! ஏனெனில் பாண்டியர் தலைநகரமே குமரியாற்றுக்குத் தெற்கே, பாண்டியன் வெட்டித் திருத்திய பண்டைப் புத்தாறாகிய பஃறுளி ஆற்றின் கரையில் - தமிழ்ப் பெயரையே கொண்ட ஆற்றின் கரையில்-இருந்தது. நகரின் பெயர் இன்றைய மதுரையின் பெயரே. இன்றைய மதுரை வடமதுரை என்றும், அது தென்மதுரை என்றும் வழங்கின.

பழய தமிழகத்தில் இன்றைய இலங்கை ஒரு பகுதி. இதை யவன உரோமர் குறிப்புக்களே சுட்டிக் காட்டுகின்றன. தமிழகத்தில் ஓடும் தாம்பிரபர்ணி- தண்பொருநை - அன்று இலங்கை வழியாக ஓடிற்று. இலங்கையில் அது ஓடிய படுகையையும் விழும் இடத்தையும் இன்றும் காணலாம் என்று பலர் கூறியுள்ளனர். செந்தமிழ் பேசும் மக்கள் பழைய செந்தமிழ் நாட்டெல்லையாகிய இப்பகுதிவரை இன்றும் வாழ்கின்றனர். ஈழத்துத் தமிழ்ப் பெரும்புலவர் யாழ்நூல் இயற்றிய விபுலானந்த அடிகள் பிறந்த ஊர் பண்டைச் செந்தமிழ் மாநிலத்தின் இத்தென்கீழ்க் கோடியிலேயே உள்ளது.

கொங்கு - ஈழம் இந்த இரண்டு சொல்லுக்கும். தமிழில் பொன் என்ற பொருள் உண்டு. பொன்னாறே பொன்னியாகிய காவிரி! வடபெண்ணை, தென்