பக்கம்:இதுதான் திராவிடநாடு.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

இதுதான் திராவிடநாடு

பண்பாடு என்னும் அவியல்! ஆனால் தென்திசை இந்த இனங்கள் எவற்றின் படையெடுப்புக்கோ, குடியெழுச்சிக்கோ என்றும் ஆட்பட்டதில்லை. அவற்றுடன் சரிசம அடிப்படையில் வாணிக, கலைத்தொடர்பன்றி வேறுதொடர்பு வைத்துக்கொண்டதில்லை. ஆரியத்தை அணைப்பினும் தமிழின் மொழிகள் வீரியம் இழந்ததில்லை. வீரரை இழந்துவிடினும் வீரமரபை இழந்துவிடவில்லை ! தென்னகப் பண்பே கீழ்த்திசையின் ஒரே பழந்தேசீயப் பண்பாக நின்று நிலவுகிறது.

டேரியஸின் பாரசீகப் பேரரசிலும், அலெக்சாண்டரின் கிரேக்கப் பேரரசிலும், கனிஷ்கரின் குஷாணப் பேரரசிலும் தில்லிமா நகரை உட்கொண்ட சிந்து கங்கைப் பெருவெளி ஒரு மாகாணமாய் அடங்கியிருந்ததுண்டு. பார்த்திய பல்லவரும் ஊணரும் அப்பரப்பெங்கும் சூறையாடிப் பேரரசுகளும் சிற்றரசுகளும் நிறுவி நூற்றாண்டுக் கணக்காக ஆண்டதுண்டு. ஆப்கானியர், முகலாயர் ஆகிய அயலினத்தவர் பிரிட்டிஷ் ஆட்சிவரை அதைத் தம் வேட்டைக் களமாக்கிக் கொண்டிருந்தனர்.

வடநாடு அடிமைப்பரப்பாக அல்லல்பட்டுக் கொண்டிருந்த இந்த இரண்டாயிர ஆண்டுக்காலமும், தெற்கே திராவிடம் தனிச் செங்கோல் ஓச்சிக்கொண்டிருந்த காலம் ஆகும். உலகின் குடியேற்றக் களமாக வடதிசை நிலவிய அந்தக் கால முழுவதும், தென்னகம் மேலையுலகையும் கீழையுலகையும் தன் குடியேற்றக் களமாகவும், வாணிகக் களமாகவும் ஆக்கிக் கொண்டிருந்தது. தைமூரும், நாதர்ஷாவும், அகமதுஷா அப்துராணியும் அதைச் சூறையாடிக்கொண்டிருந்த அதேகாலத்தில் தென்னாட்டவர் இலங்கையையும், இந்துமா கடல் தீவங்களையும், தென் கிழக்காசி