பக்கம்:இதுதான் திராவிடநாடு.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

இதுதான் திராவிடநாடு

பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்னே எதுவரை பாரசிகம், எது முதல் இந்தியா என்ற எல்லை வரையறை கிடையாது. வெள்ளையனின் ஏகாதிபத்தியக் கரம் சென்றெட்டிய எல்லை வரையறையே தவிர, வேறுஎல்லை இல்லை. அப்பிரிவினைக்குப் பின்னோ இந்து-முஸ்லிம் கலவரங்கள் அமைத்த எல்லையே எல்லை. இந்த எல்லைகள் அரசியல் எல்லைகள் மட்டுமே, நிலவரமான தேசீய எல்லைகள் என்று எவரும் கூறமுடியாது. ஏனெனில் வருங்காலப் போர்கள் ஒவ்வொன்றாலும் இவை மாறுபடத்தக்கவை.

இன்றைய பாரதத்தின் எல்லை இன அடிப்படையாக, மொழியடிப்படையாக அமைந்ததன்று. வங்காள மொழி பேசுகிறவர்கள் இந்தியாவிலும், கிழக்குப் பாகிஸ்தானத்திலும் சிதறிக் கிடக்கிறார்கள். பஞ்சாபி மொழி பேசுபவர்கள், சீக்கியர்கள், சிந்திமொழி பேசுபவர்கள் அது போலவே மேற்கெல்லையில் இரு தேசிய இனங்களிடையே சிதறிக் கிடக்கிறார்கள். பாரதக் கூட்டுறவினுள்ளே வாழும் மக்கள் மொழிவழி, இன வழி, நாகரிகவழி-எவ்வழி பார்த்தாலும் சிறியபெரிய மொழிகள், மொழியினங்கள், இனக் கூட்டுறவுகளின் கதம்ப கூளங்கள், அவியல் கும்பல்களாகவே உள்ளனர். அதில் தனிநாடு கோரும் திராவிடநாடு போலவே, தனி வாழ்வு கோரும் நாகர் முதலிய பல்வேறு இனத்தினர் விலங்குக் காட்சிசாலையில் அடைபட்டுக் கிடப்பதுபோலக் கிடந்துழல்கின்றனர். இப்பெரும்பரப்பை ஒரு கண்டமென்று சிலரும், கண்டமன்று, ஒரு சிறு உலகம் என்று சிலரும் கூறுவது இதனாலேயே.