பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியக் கலைச் செல்வம்

சூலம், வாள் முதலிய ஒவ்வொன்றும் ஒவ்வொரு கருத்தைப் பற்றியே ஆக்கப்பட்டிருக்கின்றன. எல்லாம் உருண்டுகொண்டிருக்கும் உலகில் நிகழும் காரியங்களே என்பதை நடனராஜனது உருவத்தைச் சுற்றியமைந்திருக்கும் திருவாசி குறித்து நிற்கிறது. இப்படியேதான் ஒவ்வொரு உருவத்தில் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு தத்துவத்தை நினைக்க உதவியிருக்கின்றது. வாக்கிற்கும் மனத்திற்கும் எட்டாத பரம்பொருளை உருவாக்கும்போது அவ்வுருவத்தின் ஒரு சில பகுதிகள் மிகை அமைப்பு என்றே தோன்றலாம். என்றாலும், ஒவ்வொரு அம்சமும் ஒவ்வொரு தத்துவத்தை அழுத்தமாக எடுத்துக்காட்ட அமைந்த சின்னமாகவே இருக்கும். ஆதலால் சிற்பக் கலையின் மிகை அமைப்பு, சிற்பிகளால் கையாளப்படும் ஒரு இன்றியமையாத உத்தி. அந்த மிகை அமைப்பும், அழுத்தமும் இல்லையேல், நல்ல சிற்ப உருவங்களே நமக்குக் கிடைத்திரா.