பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/116

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியக் கலைச் செல்வம்

யும். கீழிருந்து மேலே போகும்போது சொரசொர என்று ஏறுவதையும் காணலாம். கேட்கலாம். இது ஒரு நல்ல கலை மெருகுதானே?

இதைவிட அற்புதமான கலை மெருகுடைய இன்னொரு நடராஜத் திருவுருவமும் உண்டு. அது இருப்பது தஞ்சைப் பெரிய கோயிலில். இந்தச் சிலையை, இந்த ஆடவல்லானை அமைத்த சிற்பி கோனேரி ராஜபுரத்து நடராஜர் திருவுருவை அமைத்த சிற்பியைவிடக் கலை உணர்ச்சி நிரம்ப வாய்ந்தவன். தமிழ்நாட்டில் உள்ள எல்லா நடராஜர் உருவங்களிலும் முகம் கோணாமல், திரும்பாமல் நேரே பார்ப்பதாகத்தான் இருக்கும். நடராஜரது ஆனந்தத் தாண்டவம் இடது கையையும், இடது காலையும் வலப்புறமாக வீசி ஆடும் ஆட்டம் என்பது எல்லாருக்கும் தெரியும். அந்த ஆட்டத்தில் அமையும் சுழற்சிதான், அண்டங்களில் உள்ள சுழற்சி என்பதையும் அறிவோம். அணுவுக்குள் அணுவாக நின்று அண்டங்களை ஆட்டும் அண்ணல், சுழன்று சுழன்று ஆடுவதினாலேதான் அண்டங்கள் ஆடுகின்றன என்பதையும் கூடத் தெரிந்திருக்கிறோம். ஆம்; எல்லாச் சுழற்சியும் வலப்புறமாக அமைந்த சுழற்சிதான். இந்தச் சுழற்சிக்கு இன்னும் அதிக வேகம் கொடுக்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்திருக்கிறான் சிற்பி. எல்லா அவயங்களும் வலப்புறமாகச் சுழலும்போது முகம் மட்டும் கொஞ்சம் இடப்புறம் திரும்பிவிட்டால் சுழற்சியின் வேகம் அதிகப்பட்டுவிடுமல்லவா? இதை உணர்ந்து இந்த நடராஜன் திருமுகத்தை மட்டும் கொஞ்சம் இடப்பக்கமாகத் திருப்பியிருக்கிறான் சிற்பி. உடனாடும் அம்மை சிவகாமியின் பக்கம்

113