பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/119

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்



என்று கம்பனது வர்ணனை ஞாபகத்திற்கு வருகிறது” என்று. “ஆம், வரும் ஐயா வரும் உமக்கு” என்று சொல்லிக் கொண்டே மறைந்துவிட்டான் சிற்பி, என் கற்பனை உலகிலிருந்து. இந்தச் சிற்பியும் கலை மெருகை நன்குணர்ந்தவனே. இன்னும் இதுபோல் எத்தனையோ உதாரணங்கள் சிற்ப உலகில் காணும் கலை மெருகுக்குக் கொடுக்கலாம்.

இனி, சித்திர உலகிற்கு வரலாம். சிற்பக் கலையில் தமிழன் அடைந்திருக்கும் உன்னத ஸ்தானத்தை அவன் அன்றும் சரி, இன்றும் சரி, சித்திரக் கலையில் பெறவில்லை. சித்தன்ன வாசல், தஞ்சைப் பெரிய கோயில், பனைமலை முதலிய இடங்களில் எல்லாம் நல்ல சித்திரங்கள் ஆயிரம் வருஷங்களுக்கு முன்னமேயே எழுதப்பட்டு இன்னும் அழியா வண்ணத்துடன் இருக்கிறது என்பது பெருமைப்படுவதற்கு உரியதுதான். அத்தோடு சேரநாட்டில் பத்மநாபபுரம் அரண்மனையிலும், திருச்சூர் வடுகநாதன் கோயில், திருவஞ்சைக்களம் நடராஜர் சந்நிதியிலும் உள்ள சுவர் சித்திரங்கள் எல்லாம் தமிழ்நாட்டின் சித்திரக் கலைக்கு பெருமை தேடிக் கொடுப்பவைதான் என்றாலும், அஜந்தா வண்ண ஒவியங்களோடு போட்டி போடும் தன்மை வாய்ந்தவை அல்ல என்று சொல்வதற்கு நாம் வெட்கப்பட வேண்டியதில்லை. ஆதலால் சித்திரக்கலை சம்பந்தப்படுவது மட்டில் நாம் பழமையை மறந்து புதுமைக்கு வரலாம். இந்திய நாட்டுச் சித்திரக் கலை வெறும் வண்ணத்தையும் சுண்ணத்தையும் மட்டும் கொண்டு ஆக்கப்பட்டவை அன்று. அவற்றிற்கு அப்பால் சிறந்த எண்ணத்தையும் கொண்டு உருவாக்கப்பட்ட ஒன்றாகும். சித்திரக்

116