பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/121

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

கில் தங்கியிருந்தார்கள். பல வருஷங்களுக்கு முன்னால் பனி படிந்த அந்த இமய மலையின் தோற்றங்களை சித்திரங்களாகத் தீட்டிக்கொண்டிருந்தார்கள். எழுதினார்கள் படங்களை. ஆனால், அந்தச் சிவப்புக் கலந்த நீல நிறத்தை தங்கள் படங்களில் கொண்டுவரவே முடியவில்லை. எழுதி எழுதிச் சோர்ந்துபோய்விட்டார்கள் எல்லோரும். மூவரும் படுக்கைக்குச் சென்றுவிட்டார்கள். விடிந்து எழுந்து பார்த்தால் வேங்கடப்பாவின் மூளை வேலை செய்திருக்கிறது. இரவுக்கிரவாகவே அவர் தன் படத்தை அந்த வர்ணத் தண்ணீரிலேயே தோய்த்து எடுத்திருக்கிறார். அவ்வளவுதான். தூரிகையால் சாதிக்க முடியாத ஒன்றை தோய்த்து எடுத்து சாதித்துவிட்டார் என்று தெரிந்தது. இது கலை மெருகோடு கூடிய கைத்திறன்தானே.

கலையும் கலை மெருகும் ஒன்றுக்கொன்று மாறுபட்டதோ என்று தோன்றும், என்றாலும் கலைக்குக் கற்பனை வேண்டும். கலை மெருகுக்கு கைத்திறன் வேண்டும். இரண்டும் ஒன்றுக்கொன்று உறுதுணையாக நின்றால்தான் கலா சிருஷ்டி தோன்றும். அப்படிப்பட்ட சிருஷ்டிகள் சிற்பக் கலையில் எண்ணிறந்தவை உண்டு. சித்திரக் கலையில் இப்போது அவ்வளவு அதிகம் இந்த மெருகு இல்லாவிட்டாலும் நாளடைவில் சித்திரக் கலை வளர வளர புதுப்புது மெருகுகளும் ஏற்படத்தானே செய்யும்?

118