பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/146

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியக் கலைச் செல்வம்

பிரிவாகக் கூறுவார்கள. நாகரம், வேசரம், திராவிடம் என்று. நாகரம், என்னும் முறை இந்தியாவில் நருமதை ஆற்றிற்கு வடக்கே நின்றிருக்கிறது. அடி முதல் முடிவரை நான்கு பட்டைச் சதுரமாக கோயில்களை அமைப்பதே இம்முறை. இந்த முறை தமிழ்நாட்டிற்கு வரவே இல்லை. தரை அமைப்பிலும் கட்டிட அமைப்பிலும் விமான அமைப்பிலும் வட்ட வடிவமாக அல்லது நீண்ட அரை வட்ட வடிவமாக அமைப்பதே வேசரம். இம்முறையை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் கையாண்டிருக்கிறார்கள். அரங்கத்து அரவணையான் கர்ப்பக்கிரஹம், உத்தரங்கம் என்னும் பள்ளி கொண்டான் கர்ப்பக்கிருஹம் எல்லாம் பிரணவாகாசமாக அமைந்திருப்பதை அறிவோம். இங்குள்ள விமானங்கள், இன்னம்பர் முதலிய கோயில்களில் உள்ள விமானங்கள் கஜப்பிரஷ்டம் என்னும் முறையிலே அரை வட்டமாக அமைந்திருப்பதையும் பார்த்திருக்கிறோம். இவைகள் வேசர முறையில் கட்டப்பட்ட கோயில்கள் என்று கூறலாம். திராவிட முறையில் அமைக்கப்பட்ட கோயில்களே வடக்கே கிருஷ்ணாவிலிருந்து தெற்கே குமரி வரை நிறைந்திருக்கக் காண்கிறோம். இக்கோயில்கள் எல்லாம் பெரும்பாலும் கிழக்கே பார்த்த கோயில்களாகவே இருக்கும். ஒரு சில கோயில்கள் மேற்கு நோக்கியும் இருப்பதுண்டு. இக்கோயில்களில் பெரும்பாலும் கர்ப்பகிருகம் சதுர அமைப்புடையதாகத்தான் இருக்கும். இக்கர்ப்பக் கிருகத்தை அடுத்த அர்த்த மண்டபம் நீண்ட சதுர வடிவினதாக இருக்கும். பல்லவ மன்னர்கள் காலத்தில் கருவறையுடனும் அர்த்த மண்டபத்துடனும் நின்ற கோயில்களில், பின்னர் பலபல

143