பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/159

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

ராஜன் தந்தையாம் சுந்தரசோழன் உயிர்நீத்து, பொன் மாளிகை துஞ்சிய தேவன் என்றும் பெயர் பெற்றிருக்கிறான் என்று சரித்திர ஆசிரியர் கூறுவர். காஞ்சிக்கே போய் இந்தப் பொன் மாளிகையைத் தேடி அலைந்தேன். அங்கும் பொன் மாளிகையையும் காணோம், மண் மாளிகையையும் காணோம். இன்னும் பழையாறைப் பட்டீச்சுரம் என்ற வட்டாரத்தில் சோழ மாளிகை என்று ஒரு கிராமமே இருக்கிறதே என்று கேள்விப்பட்டு, அங்கு நல்ல உச்சி வெயிலில் சென்று சோழ மாளிகையைத் தேடினேன். இந்த முயற்சியும் கானல் நீராகவே முடிந்தது. சொல்லப்போனால், இந்தச் சேர சோழ பாண்டியர்கள், அவர்களை எல்லாம் முந்திக் கொண்டு கோயில் கட்ட முனைந்த பல்லவ மன்னர்கள் எல்லாம் தங்கள் தங்களுக்கு என்று மாளிகைகளே கட்டிக் கொள்ளவில்லை போலிருக்கிறது. எல்லாத் தமிழ் மன்னர்களும் எல்லாம் வல்ல இறைவனுக்குக் கோயில் கட்ட முனைந்திருக்கிறார்களே அன்றித் தங்களுக்கு என்று மாளிகையோ, அரண்மனையோ கட்டிக் கொள்ளவில்லை என்று அறிகிறபோது அவர்கள் நம் உள்ளத்தில் எவ்வளவு உயர்ந்து விடுகிறார்கள்! நித்யத்வம் பெறாத மனிதனுக்கு அரசனேயானாலும், மாளிகை எதற்கு என்றல்லவா எண்ணிவிட்டார்கள். என்றும் நித்தியனாய் இருக்கும் இறைவனுக்கே கோயில்கள் கட்டி, கலை உலகில் நித்யத்வம் பெற்று விட்டார்கள் இவர்கள்.

இந்தத் தமிழ் மன்னர்களுக்குப் பின் தமிழ் நாட்டை ஆளவந்த விஜய நகரத்து நாயக்க மன்னர்களே கோயில்கள் கட்டுவதோடு மாளிகைகளையும் கட்டியிருக்கிறார்கள். அப்படி அவர்கள் கட்டிய மாளி

156