பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/173

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

உயர்த்தி அந்த விமானத்தின் பேரில் 80 டன் நிறையுள்ள பிரமரந்திர தளக் கல்லையும் பரப்பி அதன் பேரில் பொன் போர்த்த ஸ்தூபியையும் நிறுவி கோயில் கட்டி முடித்திருக்கிறான் ராஜ ராஜன், அக்கோயிலிலே 84 அடி சுற்றளவுடைய ஆவுடையாரில் 17 அடி உயரமுள்ள லிங்கத் திரு உருவையும் பிரதிஷ்டை செய்கிறான். பெரு உடையார் எனப் பெயரிட்டு வணங்குகிறான். இப்படித்தான் சிறியன சிந்தியாத ராஜராஜன் பெருஉடையாருக்கு கோயில் கட்டிய தன் மூலம் அகண்ட தமிழகத்தைத் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்த பெருமையைவிட உயர்ந்த தமிழ்கத்தை உருவாக்கியவன் என்ற புகழுக்கு உரியவன் ஆகிறான். தமக்கையும் “தம்பி! அன்று வள்ளுவன் சொன்னான்; ‘உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல்’ என்று, அதற்கேற்ப உயர்ந்த எண்ணமே உன் உள்ளத்தில் நிறைந்து உயர்ந்ததொரு கோயிலையே உருவாக்கி இருக்கிறது” என்கிறாள் பெருமிதத்தோடு. ஆம், தமிழன் எண்ணமெல்லாம் உயர்ந்தவை. அவன் எடுத்து முடித்த காரியங்கள் எல்லாம் உயர்ந்தவை. அவன் வளர்த்த பண்பாடு உயர்ந்தது. அந்தப் பண்பாட்டை உருவாக்கும் கவிதை, காவியம், இசை, நடனம், சித்திரம், சிற்பம் எல்லாம் உயர்ந்தவைதான்.

தமிழ்நாட்டில், வளர்ந்த சித்திரங்கள் தமிழனது பண்பாட்டை எவ்வகையில் எடுத்துக் காட்டுகின்றது என்பதை முதலில் பார்க்கலாம். சித்திரக் கலையை ஏதோ ஒரு தொழில் என்று மட்டும் கருதாது நல்ல யோக சாதனமாகவே கருதியவர்கள் தமிழர்கள். மேலை நாட்டில் புகழ்பெற்ற சித்ரீகர்கள் எல்லாம்

170