பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/175

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

ளின் சித்திரங்கள் பிரசித்தமானவை. இவனது அடி ஒட்டியே காஞ்சி கைலாசநாதர் கோயிலின் திரு உண்ணாழிப் பிரகாரத்தில் சில சித்திரங்களைத் தீட்டி வைத்திருக்கிறான் ராஜசிம்ம பல்லவன். அங்குள்ளவற்றில் இன்று காணக் கிடைப்பது ஒன்று மகாபுருஷரின் நின்ற கோலம், மற்றொன்று சிவனுடைய சோமாஸ்கந்த வடிவம். இரண்டுமே சிதைந்து இருந்தாலும் பண்டைத் தமிழரின் சித்திரக் கலைக்கு அவை சிறந்த சான்று பகர்கின்றன, அழியா வண்ணத்தில் தீட்டிய அமர ஓவியங்கள் என்று மட்டும் இவற்றிற்குப் பெருமை இல்லை. நல்ல கம்பீரமும், வண்ணக் கோலமும், உயர்ந்த எண்ணங்களையுமே பிரதிபலிக்கும் சித்திரங்கள் அவை.

பல்லவர் காலத்துக்குப்பின் தமிழ்நாட்டை ஆண்ட சோழ மன்னர்களது ஆதரவில் சித்திரக் கலை சிறப்பாகவே வளர்ந்திருக்கிறது. அக்காலத்தே நுண்ணிதில் உயர்ந்து நுழைந்த நோக்கின் கண்ணுள் வினைஞராம் ஓவியர் பலர் இருந்தனர் என்று இலக்கியங்கள் மூலம் அறிகின்றோம். கலை வளர்த்த காவலனான ராஜராஜன் காலத்தில் இச்சித்திரக் கலை சிறப்புற்றதில் வியப்பில்லை, தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் கருவறையைச் சுற்றிய பிரகாரத்திலே அழகிய சித்திரங்கள் பல தீட்டப்பட்டிருக்கின்றன. எல்லாவற்றையும் தூக்கி அடிக்கும் வகையில் திரிபுராந்தகன் கோலம் அற்புதச் சித்திரம். பூமியாகிய தேரில் பிரமன் தேர்ப்பாகனாக இருந்து ஓட்ட கணேசன், கார்த்திகேயன், துர்க்கை முதலியவர்கள் துணை வர, இறைவன் போருக்குப் புறப்படும் காட்சி சித்திர உலகத்திலேயே ஒரு அரிய சாதனை. ‘உள்ளுவதெல்

172