பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/178

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியக் கலைச் செல்வம்

யையுமே வெட்டிச் செதுக்கி கல் ரதங்களையும் சிறந்த சிற்ப வடிவங்களையும் உருவாக்கியிருக்கிறான் மகேந்திரன் மகனான மாமல்லன். அவன் கலை உலகில் கண்ட கனவெல்லாம் நனவான இடம் அந்த மாமல்லபுரம். அங்குதான் எத்தனை எத்தனை சிற்பச் செல்வங்கள். கற்களையே கனிய வைத்து கோவர்த்தனதாரி, கங்காதரன், மஹிஷ மர்த்தனி, அனந்தசயனன், திரிவிக்கிரமன், அர்த்தநாரி, கஜலக்ஷ்மி, துர்க்கை என்றெல்லாம் எண்ணற்ற திருவுருவங்களை அர்த்த சித்திரங்களாக (Base relief) அமைத்திருக்கிறான் அவன். இப்படி ஏதோ தெய்வத் திருவுருவங்களை மட்டுமே அன்றைய சிற்பிகள் வடித்தார்கள் என்பது இல்லை. சிங்கமும் புலியும், யானையும் ரிஷபமும், மானும், குரங்குமே அச்சிற்பிகள் கலையில் உயிர் பெற்றிருக்கின்றன. இன்னும் சோமாஸ்கந்தரையும் விஷ்ணுவையும் பற்பல கோலங்களில் உருவாக்கியிருக்கிறார்கள். எல்லாம் காத்திரமான வடிவங்கள். உணர்ச்சிகளை உருவாக்கும் சிற்பங்கள்.

பல்லவ மன்னர்களுக்குப் பின் வந்த சோழ மன்னர்கள் இச்சிற்பக்கலை வளர்ச்சியில் எடுத்துக்கொண்ட அக்கறை இவ்வளவு அவ்வளவு என்று வரையறுத்துக் கூற முடியாது, எண்தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது கட்டியதோடு அவர்கள் திருப்தி அடையவில்லை. கட்டிய கோயில்களில் எல்லாம் அற்புதம் அற்புதமான மூர்த்திகளையும் உருவாக்கி நிறுத்த அவர்கள் தவறவே இல்லை. கங்காதரர், கங்காளர், கஜசம்ஹாரர், திரிபுராந்தகர். ரிஷபவாகனர், சுகாசனர், இன்னும் நீலமேனி நெடியோன், மல்லாண்ட திண்தோள் மணிவண்ணன், நான்

175