பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/182

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியக் கலைச் செல்வம்

ஏது? திவ்யப் பிரபந்தப் பாடல்கள் ஏது? கோயில் என்று ஒன்று இல்லாவிட்டால் இன்னிசை எழுவது ஏது, சித்திரமும் சிற்பமும், நடனமும், நாட்டியமும் உருவாவதுதான் ஏது? நம் நாட்டு கவின் கலைகள் எல்லாமே சமயச் சார்புடையவையாகத்தான் இருந்திருக்கின்றன. அதனால்தான் அருங்கலைகளைப் பற்றி ஆராய்பவர்க்கு எல்லாம் கோயிலே நிலைக்களமாக அமைகின்றன. கோயிலைச் சுற்றி எல்லாக் கலைகளும் எப்படி வளர்ந்தன என்று நான் சொல்லப் போவதில்லை. கோயில் வளர்த்த ஓவியக் கலையைப் பற்றியே ஒரு சில வார்த்தைகள்.

தமிழ்நாட்டுக் கலைகளில் மிகவும் சிறந்திருப்பது சிற்பக் கலைதான். உலகில் உள்ள எல்லா சிற்ப வடிவங்களுக்கும் முதுகுக்கு மண் காட்டும் வகையில் சிற்பக்கலை இங்கு உருவாகியிருக்கிறது. இது சிற்பக் கலை நிபுணர்கள் எல்லோரும் ஒப்புக்கொண்ட உண்மை. இந்த அளவிற்கு ஓவியக்கலை உச்சநிலையை எய்தவில்லை என்பதும் வெள்ளிடைமலை. என்றாலும், பலரும் போற்றும் வகையில் அக்கலை உருவாகியிருக்கிறது என்பதும் மறுக்க முடியாதது. ஓவியம் என்றால் சுவர்களிலும், திரைச்சீலைகளிலும் வண்ணத்தைத் தீட்டி, வடிவங்களையும் காட்சிகளையும் வரைவதாகும். இக்கலையை மேலை நாட்டினர் மிகவும் திறமையுடன் வளர்த்திருக்கிறார்கள். பழைய இத்தாலி நாட்டிலே மைக்கேல், ஆஞ்சலோ ரப்பேல் போன்ற அரிய சித்திரக் கலைஞர்கள் இருந்திருக்கிறார்கள், பின்னரும் சர்ஜோஷுவா, ரெய்னால்ட்ஸ் போன்ற சித்ரீகரது சித்திரங்கள் எல்லாம் மேலை நாட்டு ஓவியக் கலைக்கு வளம் தருவதாகும். இந்த

179