பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/189

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

கேட்டு, தம்பியின் வெற்றி எல்லாம் தன் வெற்றி எனவும், சோழப் பேரரசின் வெற்றி எனவும் எண்ணிப் பெருமிதம் கொள்கிறாள் குந்தவைப் பிராட்டி. “சேரர், பாண்டியர், பல்லவர் எல்லோரும் அடிபணிந்துவிட்டனர். காந்தளூரில் கலம் அறுத்து, பாண்டியன் அமர புஜங்களை முறியடித்து, வேங்கி நாட்டையும் கங்கபாடியையும் அடிமை கொண்டு, நுளம்பபாடியைக் கைப்பற்றி, குடமலை நாடு, கொல்லம், கலிங்கம் முதலிய பிரதேசங்களின் மீது படை கொண்டு சென்று வெற்றியைத் தனதாக்கிய தோடு அவன் நிற்கவில்லை. கடல் கடந்து சென்று ஈழ நாட்டையும் வென்று, அதனை மும்முடிச் சோழ மண்டலமாக்கி இன்னும் அலை கடல் நடுவில் பல கலம் செலுத்தி, முன்னீர்ப் பழந்தீவு பன்னீராயிரத்தையும் கைக் கொண்டு ஜயங்கொண்ட சோழனாக வல்லவா திரும்பியிருக்கிறான். தன் தம்பி” என்றெல்லாம் இப்படி ஒரு அகண்ட தமிழகத்தையே உருவாக்கிவிட்ட தம்பியைப் பலவாறு பாராட்டிப் பேசிக் கொண்டே அவனுடன் வழி நடக்கிறாள் தமக்கை.

சற்று நேரத்தில் இருவரும் ஒரு சோலை நடுவே தனித்ததொரு கோயிலாக இருந்த தஞ்சைத் தளிக் குளத்தை அணுகுகிறார்கள். அங்கு லிங்கத் திருஉருவில் எழுந்தருளியிருந்த இறைவனை வணங்குகிறார்கள். ‘விண்ணிறைந்து மண் நிறைந்து மிக்காய் விளங்கொளியாய், எண்ணிறந்து எல்லை இலாதானாகப் பரந்து நிற்கும் இறைவனுக்கா இவ்வளவு சிறிய கோயில்?’ என்று எண்ணுகிறான் ராஜராஜன். அப்படியே நினைக்கிறாள் அருமைத் தமக்கையும். தம்பியை முந்திக் கொண்டு குந்தவை, “தம்பி! உனது

186