பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/197

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

பாடெல்லாம் என்னவோ மொட்டைக் கோபுரத்தைப் போலத்தான். 40 அடிக்கு மேலே மொட்டையாய் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு பிரமிட்போல ‘ஒரு கோபுரத்தைக் கட்டி, இதில் மின்சார ஊசியையும் நட்டு வைத்து விட்ட காரணத்தினால், ஊசிக்கோபுரம் என்ற பெயர் நிலைத்துவிட்டது. இந்த மொட்டைக் கோபுரமும் ஊசிக் கோபுரமும் தமிழ்நாட்டில் இருபதாம் நூற்றாண்டின் சிற்ப வேலைக்கு ஒரு எடுத்துக்காட்டு! “கிறிஸ்து பிறப்பதற்கு 3000 வருஷங்களுக்கு முன்னாலேயே, உயர்ந்த நாகரிகமும் கலைப் பண்பும் பெற்றிருந்தவர்கள் தமிழர்கள். அவர்கள் எழுப்பிய கலைக்கோயில்கள் தமிழ்நாடு முழுவதும் தலைதூக்கி நிற்கின்றன” என்று பழம் பெருமை பேசுகிறோம் நாம். அத்தகைய சிற்ப வேலையோடு கூடிய சிறந்த கோயில்களையும் கோபுரங்களையும் கட்டிய தமிழரது பரம்பரையில் வந்தவன் இன்று மொட்டைக் கோபுரத்தையும், ஊசிக் கோபுரத்தையும் கட்டிய பரிதாபத்துக்கு ஆளாகிறான். இருபதாம் நூற்றாண்டின் கலைவாழ்வில் தமிழன் எவ்வளவு தாழ்ந்து போயிருக்கிறான் என்றே வருந்த வேண்டியிருக்கிறது!

மொட்டைக் கோபுரமும், ஊசிக் கோபுரமும் எப்படி 20ஆம் நூற்றாண்டின் கோயிற் சிற்பத்துக்கு சான்று பகர்கின்றனவோ அதே போல பழந்தமிழர் கட்டிய கோயில்கள் அந்த அந்தக் காலத்தின் கலை வாழ்வுக்கு அழியாத சான்றுகளாக விளங்குகின்றன. தென்னிந்திய சரித்திரத்தை உருவாக்க உதவியும் செய்கின்றன. கோயில், மூர்த்தி வழிபாடு என்பதெல்லாம் தமிழருடையதே. இயற்கையினிடத்தே ஆரியர் வழிபாடு நின்றது. வேள்வியே அவர்கள் செய்த பூசனை. தனித்தனியாக வழிபடுவதே அவர்கள் வழக்கம். புத்த, சமண சமயம் தோன்றிய பின்னர்தான் அவர்களின் துறவிகள் தங்குவதற்கு தவப் பள்ளிகளும், அப்பள்ளிகளின் பேரில் பல நிலை மாடங்களும் ஏற்பட்டன. புத்தருக்கும், அறத்துக்கும் உள்ள ஏற்றம் அறவண அடிகள்

194