பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியக் கலைச் செல்வம்

இன்னும் அலைகடல் நடுவில் பல கலம் செலுத்தி, முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரத்தையும் கைப்பற்றி ஜயங்கொண்ட சோழனாகவே திரும்பியிருக்கிறான். இப்படி அகண்டதொரு தமிழகத்தை உருவாக்கிய ராஜ ராஜனது உள்ளம் ஏனோ நிறைவு பெற்றதாக இல்லை. அவனுக்குத் தெரியும், இந்த அகண்ட தமிழகம், தக்ஷிணப் பிரதேசம் என்றும் நிலைத்து இராது என்று. ஆதலால் அகண்ட தமிழகத்தை விட ஒரு உயர்ந்த தமிழகத்தை உருவாக்க வேண்டாமா என்று எண்ணியிருக்கிறான். அந்த உயர்ந்த தமிழகத்தை உருவாக்குவதில் முதற்படியாக, ஒரு பெரிய கோயிலையே கட்ட முனைந்திருக்கிறான். எண்ணூறு அடி நீளமும், நானூறு அடி அகலமும் உள்ள ஒரு பரந்த வெளியை தலைநகரான தஞ்சையிலே தேர்ந்தெடுக்கிறான். அந்தப் பரந்த வெளியிலே ஏழு வாயில்கள், நான்கு மண்டபங்களைக் கட்டியிருக்கிறான். பெரியதொரு கருவறை அமைத்து அக்கருவறையின் பேரிலே 216 அடி உயரத்திலே தக்ஷிண மேரு என்னும் விமானத்தை உயர்த்தியிருக்கிறான். அக்கோயிலை பெரிய கோயில் என்றே அழைத்திருக்கிறான். அக்கோயிலின் பெயருக்கு ஏற்ப அங்கே 18 அடி உயரமுள்ள பெரிய லிங்க உரு. - ஒன்றையும் பிரதிஷ்டை செய்து அவரைப் பெருஉடையார் என்று வாழ்த்தி வணங்கியிருக்கிறான். பெரு உடையாருக்கு ஏற்ற வகையில் பெரிய பெரிய சிற்பங்களை கல்லிலும் செம்பிலும் உருவாக்கியிருக்கிறான். இப்படி ஒரு உயர்ந்த தமிழகத்தை ராஜராஜன் உருவாக்கியது பத்தாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதி என்று சரித்திர ஏடுகள் சொல்லுகின்றன.

37