பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/47

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

இந்த முற்றத்தின் வடகிழக்குக் கோடியில் இருப்பது விஸ்வநாதர் கோயில். இந்த விஸ்வநாதர் கோயிலுக்கு எதிரேதான் பெரியதொரு நந்தி மண்டபம். இந்த விஸ்வநாதர் கோயில் சுவர்களில்தான் ஒரு பழக் குலையையும், கிளியையும் ஏந்திக் கொண்டு பெண்ணொருத்தி நிற்கிறாள். இன்னும் குழந்தையுடன் கொஞ்சிக் கொண்டிருக்கும் மங்கை ஒருத்தியும், வேணுகானம் செய்யும் நங்கை ஒருத்தியும் நிற்கிறார்கள். இங்குள்ள நந்தி ஆறு அடி உயரமே உள்ளது என்றாலும், நல்ல கம்பீரமான வடிவம். இந்த விஸ்வநாதர் கோயிலுக்கு தென்மேற்குப் பகுதியிலேதான் பார்வதி கோயில் இருக்கிறது.

இதற்கும் தென் பக்கத்தில்தான் லக்ஷ்மணன் கோயில் என்று அழைக்கப்படும் விஷ்ணு கோயில் இருக்கிறது. கந்தாரியா மகாதேவர் கோயிலுக்கு அடுத்தபடியாக உள்ள பெரிய கோயில் இதுதான். இக்கோயிலில் தான் மகாவிஷ்ணு லட்சுமி சமேதராக எழுந்தருளியிருக்கிறார். இன்னும் இங்கேயே பிரம்மாவும் சிவனும் வேறே தனித் தனி சந்நிதியில் நிற்கிறார்கள். வாயிலில் அமிருத மந்தன வரலாறு சிற்ப வடிவில் இருக்கிறது. கோயிலில் மூலவராக நிற்பவர் மூன்று திருமுகங்களுடனும் நான்கு திருக்கரங்களுடனும் நிற்கிறார். மூன்று முகத்தில் ஒரு முகம் மனித முகம். மற்றவை இரண்டும் நரசிம்ம முகமும், வராக முகமும். இத்தகைய ஒரு வடிவம் தென் தமிழ்நாட்டிலோ, அல்லது வடநாட்டிலோதான் உள்ளது. வேறு இடங்களில் காணக் கிடைப்பது அன்று. இந்த லட்சுமணன் கோயிலுக்குத் தெற்கே மதங்கேஸ்வரர் கோயில் என்று ஒரு சிவன் கோயில் இருக்கிறது.

44