பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

புவனேஸ்வரத்திலிருந்து பூரி சென்று ஜகந்நாதரைத் தரிசித்து வரலாம். பிரபலமான கோனாரக் சூரியனார் கோயிலையும் கண்டு வரலாம்.

இவ்வளவு சொன்னபின், “கஜுராஹோ புவனேஸ்வரத்தில், சிங்கார மிதுனச் சிற்பங்கள் நிறைய உண்டு என்பார்களே... அதைப்பற்றி ஏன் ஒன்றுமே சொல்லவில்லை” என்று கேட்பீர்கள். உண்மைதான், கஜுராஹோவில் வாத்சாயனரது காமநூலில் சொல்லப்பட்டுள்ள கலவிக் கரணங்களை எல்லாம் சிற்பமாக வடித்திருக்கின்றனர். புவனேஸ்வரத்திலும் இச்சிற்ப வடிவங்கள் உண்டு. இச்சிற்ப வடிவங்களைக் கோயிலில் செதுக்கி நிறுத்தலாமா என்று ஒரு பிரச்சினை. அதற்கும் எத்தனை எத்தனையோ சமாதானங்கள். கோயிலுக்கு வருபவர்களது உள்ள உறுதியைச் சோதிப்பதற்காகவே அவை இங்கு நிறுத்தப்பட்டிருக்கின்றன என்பாரும் உளர். எனக்கென்னமோ அதெல்லாம் சரி என்றுதான் தோன்றுகிறது. கணவன் மனைவி தாம்பத்ய உறவு இருவர் உள்ளத்தும் உருவாகும் அன்பை அடிப்படையாகக் கொண்டது. அந்த உறவை, சிற்பிகள் வடிக்கும்போது யாதொரு மனோ விகற்பமும் இல்லாமல்தான் வடித்திருக்க வேண்டும். அதை விகற்பமாக எண்ணுபவர்கள் உள்ளத்தில் தான் கோளாறே தவிர வடிவங்களில் கோளாறு என்று எண்ண இயலவில்லை. எல்லாவற்றையும் கலை அழகோடு காணும் கலை உள்ளம் படைத்தவர்களாக நாம் இருக்க வேண்டும். இருந்தால் அதுவே போதும்.

48