பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்


முதலில் ஹொய்சலர்கள் என்பவர்கள் யார் என்று தெரிய வேண்டாமா? ஆதியில் கிருஷ்ணன் அரசாண்ட துவாரகையில் இருந்தவர்கள் யாதவர்கள் என்று நமக்குத் தெரியும். துவாரகையிலிருந்த இவர்கள், பின்னர் மேற்குத் தொடர்ச்சி மலைப் பக்கமுள்ள சொசாவூர் என்னுமிடத்தில் வந்து குடியேறியிருக்கின்றனர். அப்போது இவர்கள் எல்லோருமே சமண சமயத்தை சார்ந்தவர்களாக இருந்திருக்கின்றனர். இவர்களது தலைவன்தான் சாலா என்பவன். ஒரு நாள் அவன் காட்டிற்குச் சென்றிருக்கிறான். அங்கு ஒரு முனிவரைக் கண்டு வணங்கியிருக்கிறான். அப்போது அந்த இடத்திற்கு ஒரு புலி வருகிறது. புலியைக் கண்ட முனிவர் தன் பக்கத்தில் கிடந்த ஒரு கழியை எடுத்து சாலாவின் கையில் கொடுத்து ‘போய் சாலா’ என்கின்றார். அவரது பாஷையில் ‘சாலா என்பவனே இந்தப் புலியைச் சாடு’ என்று அர்த்தமாம். முனிவர் கட்டளையிட்டபடியே சாலாவும் புலியைச் சாடியிருக்கிறான். புலியைக் கொன்று தீர்க்க கழி மட்டும் காணாது என்று தெரிந்த சாலா தன் உடைவாளை உருவி புலியைக் கொன்று தீர்க்கிறான். அன்று முதல் யாதவர்கள் முனிவர் வாக்கையே தேவவாக்காக ‘போய் சாலா’ என்றே தங்களை அழைத்திருக்கின்றனர். இந்தப் போய் சாலாதான் நாளடைவில் ஹோய்சலர் என்று மாறி அவர்களது குலப் பெயராக வழங்கியிருக்கிறது. இப்படி ஒரு கதை ஹொய்சலர் குலப்பெயர் பற்றி. இது எவ்வளவு தூரம் உண்மையோ அறியேன். கற்பனைக் கதையாக இருந்தால், எனக்கென்னவோ இதைவிட அழகாகவே கற்பனை செய்திருக்கலாமே என்று தோன்றுகிறது.

52