பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/99

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

கும்? பொட்டிடுகின்ற அந்த நேரத்திலேயே, அந்தப் பொட்டு தன் முகத்திற்கு எத்தகைய களை ஒன்றைக் கொடுக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள ஆசைப்படும் பெண் என்ன செய்வாள். இல்லை, என்ன செய்ய வேண்டும். இதைத்தான் சிந்தனை செய்திருக்கிறான் ஒரு சிற்பி. இடது கையில் கண்ணாடியை ஏந்திக் கொண்டு வலது கையில் நடுவிரலால் சாந்தைத் தொட்டு எடுத்து, அந்தக் கையை முதுகின் புறமாகத் தலைக்கு மேல் கொண்டு வந்து, முகத்தைக் கொஞ்சமும் மறைக்காமல் நெற்றியில் பொட்டிட்டுக் கொள்ளலாம் அல்லவா என்று தோன்றியிருக்கிறது அவனுக்கு. அப்படி அவள் பொட்டிட்டுக் கொள்ளும் போது அவள் அங்கங்கள் எல்லாம் எப்படிக் குழையும், விரல்கள் எல்லாம் எப்படித் துவளும் என்று! கற்பனை பண்ணவும் முடிந்திருக்கிறது அவனால். அப்படிப்பட்ட கற்பனை உருவொன்றே நல்ல கருங்கல் உருவில் இன்று தென்காசி காசிவிசுவாநாதர் ஆலயத்தில் காட்சி கொடுக்கிறது. இதைப் பார்த்து விட்டு இப்படி யார் சார் பொட்டிட்டுக் கொள்கிறது. இப்படி சிலையை உருவாக்குதல் மிகை தானே, அதிகப் பிரசங்கித்தனம் தானே என்று நண்பர்கள் சொன்னால் அவர்களைப் பற்றி நாம் என்ன சொல்வது? எப்படிப் பொட்டிட்டுக் கொண்டால் நன்றாயிருக்கும் என்னும் விஷயத்திற்கு அழுத்தம் கொடுத்து, சாதாரண வாழ்க்கைக்குக் கொஞ்சம் மிகையாகவே இச்சிலையை அமைத்திருக்கும் காரணத்தால் அந்தச் சிலையைப் பாராட்டுகிறோம். அதை ஆக்கிய சிற்பி

96