பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 பெருகி வருகின்றன. இவைகளோடு ஏராளமான சினிமா படங்களும் அனுப்பப்படுகின்றன.

வெளிநாடுகளிலிருந்து சீனப் பத்திரிகைகளுக்குச் செய்திகள் அனுப்புவதற்காகப் பல நிருபர்கள் அனுப்பப்பட்டிருக்கின்றனர். ‘நவ சீனச் செய்தி ஏஜன்ஸி’ என்ற ஒரு ஸ்தாபனத்திற்கு எகிப்து, ஸுடான், லெபனன், இராக், மொராக்கோ, கானா, கியூபா முதலிய பல நாடுகளிலும் சீன நிருபர்கள் இருக்கின்றனர். இவர்கள் செய்திகள் அனுப்புவதை மட்டும் தொழிலாய்க் கொண்டிருப்பதில்லை; கம்யூனிஸ்ட் சீனாவின் வலிமையையும் பெருமையையும் பிரசாரம் செய்கின்றனர்; அந்தந்த நாடுகளில் சீனாவுக்கு ஆதரவாளர்களைத் திரட்டுகின்றனர். உலகின் பல பாகங்களிலும் சீன நட்புறவுச் சங்கங்களை நிறுவுகின்றனர். இச்சங்கங்களின் மூலம் பின்னால் நெருங்கிய அரசியல் தொடர்புகளுக்கு வாய்ப்பு ஏற்படும்படி அவர்கள் செய்துவருகின்றனர்.

எல்லாவற்றிற்கும் மேலாகப் பீகிங் ரேடியோ சீனச் செய்திகளை நாள்தோறும் பல மணிநேரம் வெளிநாடுகளுக்கு அறிவித்து வருகின்றது. பிரெஞ்சு, ஆங்கிலம், ஸ்பானிய மொழிகளிலும், அரபு, துருக்கிய மொழிகளிலும்கூட அதில் ஒலிபரப்புக்கள் செய்யப்படுகின்றன.

இவ்வாறு வெளி நாட்டார்களை வரவேற்று உபசரித்தனுப்புவதற்கும், வெளிநாடுகளில் பிரசாரம் செய்வதற்கும் ஆண்டுதோறும் சீன அரசாங்கம் ரூ. 128 கோடி செலவிட்டு வருகின்றது!

சீன ராணுவம்

அரசியல் ஆதிக்கியத்தைக் கைப்பற்றுவதும், பிரசினைகளைப் போரினால் தீர்ப்பதுமே புரட்சியின் முக்

171