பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 கியமான வேலை, அதுவே தலைசிறந்த முறை என்பது மாஸே-துங் வகுத்த கொள்கை. போரிடவும், பலாத்காரத்தால் எதிரிகளை அடக்கவும் சீனச் செஞ்சேனை 1927 ஆகஸ்ட் 1-த் தேதி அமைக்கப்பெற்றது. அது ஆண்டுதோறும் வளர்ந்து, இப்போது உலகின் பெரிய படைகளில் ஒன்றாக உள்ளது. 1955, ஜூலை 30-ந் தேதி கட்டாய ராணுவ சேவை பற்றிப் பிரகடனம் செய்யப்பட்டது. பழைய ராணுவ வீரர்கள் பலர் ஆலைத் தொழில்களுக்கு அனுப்பப்பட்டனர். புதிய வாலிபர்கள் பலர் சேனையில் சேர்க்கப்பட்டனர். பயிற்சிக்குரிய லட்சக்கணக்கானவர்களுக்கு ஆங்காங்கே பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டன. ஜனத்தொகையில் ஒவ்வோர் ஆண்டிலும் 20 வயதாகக்கூடிய வாலிபர் 50 லட்சம் பேர் தோன்றுவதால், கட்டாய ராணுவ சேவையில் அவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகின்றது. கட்டாயத்தினல் இராணுவ,சேவைக்குச் சேரக் கூடியவர்களின் தொகை 8 கோடியாகும். இத்தனை பேர்களுக்கும் தளவாடங்கள், ஆயுதங்கள் கொடுக்கக் கூடிய நிலையில் அரசாங்கம் இல்லாததால், தேவைக்கு வேண்டிய அளவில் அவ்வப்போது பயிற்சி கொடுக்கப் பெறுகின்றனர். ஆயுதங்களுக்கும் தளவாடங்களுக்கும் சீன ரஷ்யாவையும், கிழக்கு ஜெர்மனியையும், செச்கோஸ்லோவேகியாவையும் எதிர்பார்த்து நிற்க வேண்டியிருக்கின்றது. இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்த வெளி உதவிகள் இன்றியமையாதவை.

கப்பற்படை, விமானப்படை ஆகியவற்றிற்குச் சீன ஸோவியத் பயிற்சியை எதிர்பார்க்கும் அளவுக்குத் தரைப் படைக்கு வெளிநாட்டாரின் பயிற்சி அவசியமில்லை. செஞ்சேனை நீண்டகாலம் போர்களில் ஈடுபட்டு அனுபவமும் பெற்றிருக்கின்றது. ‘கொரில்லா’ப் போராட்டமும், ஆயிரக்கணக்கில் சிப்பாய்களை அணி

172