பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 கப்பட்டன. லாமாக்களையும், மக்களின் தலைவர்களையும் மானபங்கப்படுத்தினர், சிறையிலிட்டனர், வதைத்தனர். சித்திரவதையும் செய்தனர். புனிதமான சிலைகளை உடைத்தெறிந்தனர், பெளத்தக் கிரந்தங்களைக் கிழித்தெறிந்தனர். பகவான் புத்தரே ஒரு பிற்போக்காளர் என்று அவர்கள் சுவரொட்டிகளிலும், பத்திரிகைகளிலும் எழுதிப் பெளத்த சமயத்தை ஏளனம் செய்தார்கள். இவற்றை யெல்லாம் கண்ட ஜனங்கள் மேலும் கொதிப்படைந்து கலகம் செய்தார்கள்.

நாள்தோறும் அகதிகள் ஆயிரக்கணக்கில் தலைநகரில் வந்து கூடினர். கம்பாக்களும் ஆம்தோ மக்களுமாக ஒரே சமயத்தில் பதினாயியரத்திற்கு மேலாக லாஸா வில் குழுமியிருந்தனர். திபேத்திய மந்திரிசபை கலகக்காரருடன் சேர்ந்திருப்பதாகச் சீனர்கள் பழி சுமத்தினார்கள். மந்திரிசபை சீனர்களுடன் ஒத்துழைப்பதாகக் கம்பாக்கள் குற்றஞ்சாட்டினர். சீனத் தளபதிகளின் தடபுடலான உத்தரவுகளைக் கண்டு மக்கள் தங்கள் தலாய் லாமாவை எதிரிகள் இரகசியமாக நர்புலிங்கா அரண்மனையிலிருந்து கடத்திக் கொண்டு போய் விடுவார்கள் என்று அஞ்சிக் கூட்டங் கூட்டமாக அரண்மனையைச் சுற்றி நிற்கத் தொடங்கினர்கள். ‘திபேத்தைத் திபேத்தியரிடமே விடுங்கள் !’ என்றும், ‘சீனர்கள் வெளியேறித் தீரவேண்டும் !’ என்றும் கோஷங்கள் ஒலித்துக்கொண்டேயிருந்தன. தலாய் லாமா அனுப்பிய செய்திகளுக்கு மக்கள் செவி சாய்க்கவில்லை. இடையில் சீனப்படையினர் நகரின் கோட்டை வாயில்களை நோக்கிப் பீரங்கிகளால் சுட ஆரம்பித்தனர்.

232