பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தலாய் லாமாவின் வெளியேற்றம்

தலாய் லாமா தம்முடைய மெய்க்காப்பாளர், பரிவாரங்கள் எவருமின்றித் தனிமையாகச் சீனப் படையினர் இருக்குமிடத்திற்கு வரவேண்டுமென்று சீனத் தளபதி டான் குவான் ஸான் உத்தரவு அனுப்பினார். மேற்கொண்டு தலாய் லாமா லாஸாவிலிருந்தால் அபாயமென்று கண்ட நண்பர்களும், அதிகாரிகளும், அவர் உடனே தப்பித்துக்கொண்டு குறிப்பிட்ட சில நண்பர்களுடன் இந்தியாவுக்குச் சென்று விட வேண்டுமென்று வற்புறுத்திச் சொன்னர்கள். தலாய் லாமாவுக்கு எப்பொழுதுமே திபேத்தைவிட்டு வெளியேற மனம் கிடையாது. தினந்தோறும் குண்டுபட்டுச் செத்து வீழும் தம் மக்களுடனே தாமும் தங்கி மரிப்பதே மேல் என்பது அவர் கருத்து. ஆயினும் அவர் வெளியேறினல், கலகம் குறைந்து மக்களின் உயிர்ச் சேதமும் குறையலாம் என்ற நம்பிக்கையில், அவர் இறுதியாக லாஸாவை விட்டுப் புறப்பட இசைந்தார். கடைசி முறையாகப் புத்தர் பெருமான நினைத்துப் பிரார்த்தனை செய்துவிட்டு, அவர் ஒரு சிப்பாயைப் போல மாறுவேடம் புனைந்து கொண்டு, அரண்மனையி லிருந்து வெளியேறி விட்டார். முக்கியமான பல தஸ்தாவேஜுகளையும், முத்திரைகளையும் எடுத்துக் கொள்ள வாய்ப்பில்லை; அரசாங்கப் பொக்கிஷத்திலிருந்து பணம் எடுத்துக் கொள்ளவும் வழியில்லை. பொட்டாலா அரண்மனையில் குவிந்து கிடந்த பொன்னும் நவரத்தினங்களும் அவைகளுக்கு உரியவரான தலாய் லாமாவுக்கு ஆபத்து வேளையில் பயன்படாமல் இருட்டறைகளில் கிடந்த இடத்திலேயே கிடந்தன !

தலாய் லாமா வெளியேறிய விஷயம் சீனர்களுக்குத் தெரியாது. அதற்கு 48 மணி நேரத்திற்குப் பின்பு அவர்கள் நர் புலிங்கா அரண்மனையைப் பீரங்கிக்

233