பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 அதை நிர்ணயம் செய்ய இந்திய அரசாங்கம் முன்வந்தது. பல பிரதேசங்களும் அளக்கப்பெற்றன. இமயமலைத் தொடரின் உச்சி வழியாகத் திபேத்துப் பீடபூமிக்கும் தெற்கு மலைப் பிரதேசத்திற்கும் இடையே இயற்கையான எல்லை வகுக்கப் பெற்றது.

இந்த எல்லை பற்றி இந்தியா, திபேத்து, சீன ஆகிய மூன்று அரசாங்கங்களின் அதிகாரம் பெற்ற பிரதிநிதிகள் விம்லாவில் கூடி, 1913, அக்டோபரிலிருந்து 1914, ஜூலை மாதம்வரை ஆராய்ந்து முடிவு செய்தனர்: பூட்டானுக்குக் கிழக்குப் பகுதியில் இந்தியதிபேத்து எல்லையை இந்தியா, திபேத்து ஆகிய இரு நாட்டுப் பிரதிநிதிகளும் உறுதி செய்துகொண்டனர். வடகிழக்கு எல்லையைக் காட்டும் இரண்டு பெரிய பூகோளப் படங்களில் எல்லைக் கோடு வரைந்து கொள்ளப்பட்டது. திபேத்தியப் பிரதிநிதி லான்சென் சத்ரா எல்லைக்கோட்டை ஒப்புக்கொள்ளும்படி லாஸா தலை நகரிலிருந்து தமது அரசாங்கம் உத்தரவு அனுப்பியிருப்பதாகத் தெரிவித்தபின், இரு நாட்டுப் பிரதிநிதிகளும் அவைகளில் கையெழுத்திட்டு, முத்திரையும் வைத்தனர். அப்பொழுது சீனப் பிரதிநிதி இவான் சென் யாதொரு ஆட்சேபமும் தெரிவிக்காததுடன், எல்லைப் படங்களிலும் கையெழுத்திட்டிருந்தார்.

ஆனால் பின்னால் சீனச் சக்கரவர்த்தி தமது பிரதிநிதியின் கையொப்பத்தை ஒப்புக்கொள்ள மறுத்தார். ஸிம்லா ஒப்பந்தத்தில் அவருக்குள்ள ஆட்சேபத்தையும் தெரிவித்திருந்தார். திபேத்தின் உட்பகுதிக்கும் சீனவுக்குமுள்ள எல்லை பற்றியே அவருக்கு ஆட்சேபம்: மக்மகான் எல்லைக் கோட்டை அவர் ஆட்சேபிக்க வில்லை. அதன் பிறகு இதுவரை எந்தச் சீன சர்க்காரும் அந்த எல்லையை மறுக்கவுமில்லை, மாற்றும்படி கோரவுமில்லை.

32