பக்கம்:இந்தியா எங்கே.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம்

21


சேனாதிபதி வீரர்களை பழக்குவது போல், அவர் விடுதலைப் படையைப் பழகவில்லை. ஒரு பொறுப்புள்ள தாயார் தனது பலவீனமான குழந்தைகளை எச்சரிக்கையோடு வளர்ப்பதுபோல், வலிமையிழந்து வாடிக் கிடந்த இந்தியர் களின் அடிமை நோயைப் படிப்படியாக நீக்கினார்.

துணிச்சலான எண்ணத்தை, தெளிவான வீரத்தை, அழியாத ஞானத்தை ஏழை இந்தியருக்கும் புரியும்படி சொல்லி இதயத்தில் பதிய வைத்தார். -

அவர் இட்ட கட்டளையை நிறைவேற்றக் காத்துக் கொண்டிருந்தது ஒரு அரசியல் ஸ்தாபனம், அதிலே பற்பல ஞானமணிகள், வீர மாணிக்கங்கள் அங்கம் வகித்தனர். இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர், பார்சி, சீக்கியர், பணக்காரன், ஏழை, புத்திமான், பாமரன், தீவிரவாதி, மிதவாதி, பட்டதாரி, பராரி என்ற பல ஜாதி மத, மொழி கொள்கை இனவர்க்கத்தைச் சேர்ந்தவர்களையெல்லாம் அரசியல் விடுதலைக்காக ஒன்று சேர்த்துக் கட்டிக் காத்தப் பெருமை இந்த ஸ்தாபனத்துக்கே உரியதாகும். இதை அவர் தன் வயப்படுத்தினார். ஆயுதங்களால் தீர்க்கப்பட்ட அரசியல் தலைவிதிகளை, அறிவால் தகர்க்க முடியும் என்றதொரு அமைதியின் சூழ்நிலையை நாட்டில் உண்டாக்கினார். உலகில் நல்லவர் உள்ளமெல்லாம் இந்தச் சாதனையை வாழ்த்தி வரவேற்றது! அரசியலில் இது ஒரு புதிய முயற்சி. இந்த அமைதிப் புரட்சியை, புதிய வழியைக் கண்ட பழைய வெள்ளையன் நம்மை பலவீனர்கள் என்று எண்ணத் தலைப்பட்டான். பல ஆண்டுகளில் பல கட்டங்களில் மெதுவாக முன்னேறியது புதிய புரட்சி!

இரண்டாவது உலகப் போர் வந்தது. இங்கிலாந்து நடுங்கிப் பதறியது. நிலைமை நமக்குச் சாதகமானது. ஏளனம் செய்த வெள்ளையரை கடைசிவரை கெளரவமாகவே நடத்தினார் காந்தியடிகள்.

ஆனால் ஆதிக்க வெறி பிடித்த அவன் கலங்கிய மூளைக்கு, கருணாமூர்த்தியின் நல்ல எண்ணம் புரியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/23&oldid=1512448" இலிருந்து மீள்விக்கப்பட்டது