பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/101

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

உரைவேந்தர் ஔவை சு. துரைசாமிபிள்ளை


சைவ சமயத்தைப் பற்றித் தாமாகவே படித்து அதன்கண் போதிய புலமையுடையவராக இருந்தபோதும், முறையாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தால், உரைவேந்தர், கந்தசாமி தேசிகர்பாலும், தவத்திரு. வாலையானந்த அடிகள்பாலும் சைவ சமயக் கல்வியைக் கற்றுத் தெளிந்தார்.

அன்னைத் தமிழின் ஆக்கத்திற்கு எவ்வாறெல்லாம் பாடுபட்டு உழைத்தாரோ, அவ்வாறெல்லாம் சைவ சமயத்திற்கும் உழைத்த பெருமை உரைவேந்தருக்கு உண்டு. ‘சைவ சித்தாந்தம்’ என்பது பெருங்கடல்; அதில் மூழ்கி, நன்முத்துக்களைப் பலர்க்கும் வாரிவழங்கிய அருள் வள்ளல் என்றும் இவரைக் கூறலாம்.

‘சைவசித்தாந்தம்’ என்றதுமே ‘அஃது ஒரு குறிப்பிட்டவர்க்கே உரியது’ என்று சிலர் தவறாக எண்ணுகின்றனர். உண்மையில் அஃதன்று. ‘இறை, உயிர், தளை’(பதி, பசு, பாசம்) எனும் முப்பொருள் உண்மைகளை முறைப்படி உணர்த்துவது. ஆழ்ந்து நோக்கின் தொல்காப்பியம், திருக்குறள்,சங்க இலக்கியங்கள் முதலானவற்றிலெல்லாம் இச் சித்தாந்தக் கருத்துக்கள் இயம்பப் பட்டுள்ளன. இது, மனிதர் அனைவர்க்குமே பொதுவானது.

               “பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
                இறைவன் அடிசேரா தார்”

(குறள்:10)

என்று வள்ளுவர் கூறியதற்கு ஏற்ப, இப் பிறவியாகிய பெரிய கடலிலிருந்து விடுபட்டு, இறைவனது திருவடியை எய்த விரும்பும் ஒவ்வொருவருக்கும் உரியதுதான் ‘சைவ சித்தாந்தம்’!

‘சைவ சித்தாந்தம்’ என்பதற்கு உரைவேந்தர் தரும் விளக்கமே தனித்தன்மை வாய்ந்தது.

“இத் தொடரைப் பிரித்து நோக்கின், ‘சைவ சித்தாந்தம்’ என்ற இருசொற்கள் தோன்றக் காண லாம். ‘சைவம்’ என்பது ‘சிவசம்பந்தம்’ என்று பொருள்தரும் ‘சைவம் சிவத்தோடு சம்பந்தமாவது’ என்பது திருமந்திரம். ‘சிவம்’ என்பது கடவுளைக் குறிக்கும் சொல்லாகும். ‘கடவுள்’ என்பது ‘இறைவன்’ என்ற ‘அன்’ ஈற்று உயர்தினைப் பெயராகவும் வழங்கும். அவ்வாறே ‘சிவம்’ என்பது