பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/108

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நிறைபுகழ் எய்திய உரைவேந்தர்

109

இருந்த பெருமை துணைவியார் உலோகாம்பாளுக்கு உரியது. ‘வாழ்க்கைத் துணைநலம்’ என்று வள்ளுவர் மொழிந்த சொல்லுக்கு இலக்கியமாகத் திகழ்ந்தமையால்தான், வீட்டுக் கவலையை அத்துணையளவு பொருட்படுத்தாமல், தொண்டு செய்ய இவரால் முடிந்தது. மதுரைத் தியாகராசர் கல்லூரிப் பணிக்கு வந்த பிறகே இவரது பொருளாதார நிலை, சிறிது உயர்ந்தது எனலாம். ஆலை அதிபர் கருமுத்துச் செட்டியாரின் கருணை உள்ளமும், அருட்செலவர் நா. மகாலிங்கனாரின் பேருதவியும், பிற்காலத்தில் உரைவேந்தருக்குக் கிடைத்தன எனலாம். பெற்ற பிள்ளைகள் அனைவருமே உயர்கல்வி கற்பதற்கும் வழிவகுத்தவர். இறுதிக் காலம் வரை கடுமையாக உழைத்தார் உரைவேந்தர்.


“பிள்ளையவர்கள், உழைப்பின் உயர்வுக்கு எடுத்துக்காட்டு. அவர் வாழ்வு ஓயா உழைப்பினால் உருவானது... ஒளவையார் குப்பம் என்னும் சிற்றூரில் எளிய குடும்பம் ஒன்றில் தோன்றினார். இளமையில் பல்வேறு இன்னல் இடையூறு - கட்கிடையில் உழைத்துப் படித்து, இண்டர் மீடியட் முதலாண்டு மட்டும் பயிலத் தொடங்கித் தொடர்ந்து படிக்கக் குடும்ப நிலை இடந்தரவில்லை... இயற்கையில் அறிவும் ஆற்றலும் சிறக்கப் பெற்ற இளைஞராகிய பிள்ளையின் வளமை கண்ட தமிழன்னை அவர்மீது தன் அருள் நோக்கைச் செலுத்தி அவரை ஆட்கொண்டாள். அவர் உள்ளத்தில் தமிழார்வம் ஊறிச் சுரக்கலுற்றது!”


என்று, மாணவர் ம.வி. இராகவன், உரைவேந்தரின் தொடக்க கால வாழ்வைச் சித்திரிக்கின்றார்.

‘இடைக்கலை’ வகுப்பில் ஓராண்டே படித்தார்; என்றாலும், அப்போது படித்த ஆங்கில அறிவைத் தம் உழைப்பினால், மென்மேலும் வளர்த்துக் கொண்டார். பெரும்பாலான தமிழாசிரியர்க்கு வாய்க்காத ஒன்று இது. அவ்வாறு அவர் ஆங்கிலப் புலமையை வளர்த்துக் கொண்டதால்தான், தாம் எழுதிய நூல்களிலெல்லாம் ஆங்கில நூற்கருத்தை மேற்கோளாகக் காட்ட முடிந்தது!