பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/116

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நிறைபுகழ் எய்திய உரைவேந்தர்

117

யெனினும் அதனையும் அறிவியல் கண்கொண்டே ஆராய்ந்து, உண்மை வெளிப்படுத்தியவர். இத்தகைய உள்ளம் கொண்டவராயிலங்கியமையால், தந்தை பெரியாரிடமும் ஈடுபாடு கொள்ள இவரால் முடிந்தது.

‘இன எழுச்சிக்குப் பாடுபட்டுவரும் தமிழின முனிவர்’ என்று பெரியாரைக்குறிப்பிடும் உரைவேந்தர், போளூரில் பணிபுரிந்தபோது, பெரியாரின் படம் ஒன்றினை வாங்கிக் கண்ணாடிச் சட்டமிட்டுச் சுவரில் மாட்டியிருந்தார். அவ்வூரினின்றும் மாறுதல் பெற்றுப் போகும் போது, அப்படம் தவறி உடைந்து விடக் கூடாதே என்ற உயர் நோக்கத்தால், அவ்வூரில் சோடாக்கடை வைத்திருந்த மாணிக்கம் என்பவரிடம் ஒப்படைத்துச் சென்றார்.

அனைத்திற்கு மேலாக ‘ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்’ எனும் குறள் நெறிப்படி வாழ்ந்து காட்டிய நல்லொழுக்க சீலர் இவர் என்பதும் குறிப்பிடத்தகும்.

உரைவேந்தர்பால் இத்தகைய உயர் பண்புகள் குடிகொண்டிருந்தமையால்தான், தாம் வாழ்ந்த காலத்திலேயே, பட்டங்களையும், பாராட்டுக்களையும் பெற முடிந்தது.

உரைவேந்தர், பல்வேறு தமிழ் அமைப்புக்கள், ஆதீனங்கள் முதலானவற்றில் உறுப்பினராக அல்லது தலைவராக இருந்து தமிழ்த் தொண்டுக்கும் சைவத் தொண்டுக்கும் ஆக்கமளித்த சிறப்பினர். தருமையாதீனப் புலவர்; தமிழகப் புலவர் குழு உறுப்பினர். மதுரைத் திருவள்ளுவர் கழகம், தமிழ் எழுத்தாளர் மன்றம், இவற்றில் பொறுப்பான பதவிகள் வகித்தவர். இவரிடம் பயின்ற மாணவர்களில் பலர் உயர் பதவிகளில் உள்ளனர். புகழ்பெற்ற கவிஞர்களும் உண்டு.

உரைவேந்தருக்கு, இயல்பாகவே ஊர்ப்பெயரால் ‘ஔவை’ எனும் பெயர் அமைந்தது. ஔவையாராக நடித்துப் புகழ் பெற்ற நடிகர் டி.கே.சண்முகம், ‘ஔவை சண்முகம்’ எனப் பெயர்பெற்றது நாடறிந்த உண்மை. உரைவேந்தர், கவிதை பாடுவதிலும் வல்லவரே! அவ்வப்போது அரிய கவிதை பல யாத்துள்ளார். ஆயினும் இவரது உள்ளம், உரைநடை எழுதுவதிலே- ஆராய்ச்சி செய்வதிலேதான் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தது! ‘ஔவையார்’ என்னும் புலவரைப் போல் உரைவேந்தரும் தமிழ்ப்புலமை நலம் சிறக்கப் பெற்றிருந்தமையால், ‘ஔவை துரைசாமிபிள்ளை’ என்று பலரும் போற்றத் தலைப்பட்டனர். இது குறித்து அவரின் மாணவரும் நல்ல கவிஞருமான மீ. இராசேந்திரன் (மீரா) பாடிய கவிதை அற்புதமானது: