பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

முன்னுரை

இருக்கும்’ எனல். மற்றொன்று; செய்யுட்கு அணி (அலங்காரம்) ஆக அமைந்து, படிப்பவர்க்கு இன்பம் தருதல். (எ.டு.) தாமரை போன்ற ஒளி (வாள்) பொருந்திய முகத்தினையுடைய பெண்களே (தையலீர்).

இவ்வாறு உரைநயம் காணும் வித்தகர்கள், இளம்பூரணருக்குப் பின்னும் நம் தமிழகத்தில் தோன்றியுள்ளனர். நச்சினார்க்கினியர், பேராசிரியர், சேனாவரையர், பரிமேலழகர் போன்றோர் இவ் வரிசையில் வைத்து எண்ணத்தக்க பெரும் உரையாசிரியர்கள்.

அண்மைக் காலத்தில் வாழ்ந்த பெரியார்களில், பெரிய புராணத்துக்கு விளக்கவுரை கண்ட ‘சிவக்கவிமணி’ சி.கே. சுப்பிரமணிய முதலியார், திருக்குறளுக்கும் கம்பராமாயணத்துக்கும் விளக்கவுரை கண்ட ‘கவிராச பண்டிதர்’ செகவீர பாண்டியனார் ஆகியோர் குறிப்பிடத்தக்கோராவர். இவர்கள் வரிசையில் வைத்து எண்ணத்தக்க பேராசிரியர்-ஒளவை சு.துரைசாமி பிள்ளை ஆவார்!

“நூலுக்கு நூலருமை காட்டுவதில் நுண்ணறிஞன் மேலுக்குச்சொல்லவில்லைவேர்ப்பலாத்-தோலுக்குள் உள்ள சுளைகொடுக்கும் உண்மை உழைப்பாளன் அள்ளக் குறையாத ஆறு!”

என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசனாரால் போற்றப் பெறுபவர் ‘உரைவேந்தர்’ ஒளவை துரைசாமிபிள்ளை!

‘உரைவேந்தர்’, இல்லற ஏந்தலாக இலங்கியவர்; பேராசிரியப் பெருந்தகையாகப் பிறங்கியவர்; சங்கத் தொகை நூல்கட்கும் பிறவற்றிற்கும் உரைநயம் கண்ட உரவோராகத் திகழ்ந்தவர் சைவத்தின் சிறப்பையும் சைவ சித்தாந்தத்தின் மேன்மையையும் எடுத்துரைத்த சித்தாந்த வித்தகர்; தமிழ்ச் சொற்களின் பொருள்நயம் காண்பதிலும், ஊர்ப்பெயர்களின் உண்மைதனை எடுத்துரைப்பதிலும் சொல்லின் செல்வராக