பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை

இருந்தார். 1924ஆம் ஆண்டிலேயே இதைச் செய்தார். அவரிடத்து மீளா அடிமையாகக் கூடிய மனப்பான்மை எங்கட்குத் தோன்றியது!

“அவர் தமிழில் பேசிய பேச்சுக்கள், எங்களைக் கவர்ந்தன. அவர் பேச்சில் வேற்றுமொழி கலக்கவே கலக்காது; எங்களைத் தமிழில் பழக, ஊக்குவித்தவர் அவரே!”

என்று நற்றமிழில் பேசும் பெற்றியைத் தமிழவேளிடமிருந்து கற்றுக் கொண்டதாக உரைவேந்தர் கூறுவது எண்ணத்தக்கது.

1925ஆம் ஆண்டு முதல் 1928ஆம் ஆண்டுவரை, கரந்தையில் தங்கியிருந்தார் உரைவேந்தர்; ஆசிரியப்பணி, ஏடு பெயர்த்தெழுதும் பணி, தமிழவேள் முதலான அறிஞர்களுடன் அவ்வப்போது உடன் சென்று உதவும்பணி ஆகிய இவற்றுக் கிடையே, வேங்கடாசலம் பிள்ளை, நாட்டார் ஆகியோரிடம் அமயம் நேரும் போதெல்லாம், தமிழ்ப்பாடம் பயின்று. 1930-இல், சென்னைப் பல்கலைக்கழக 'வித்துவான்' தேர்வும் எழுதி வெற்றி பெற்றார். பிற்காலத்தில் ‘பேராசிரியப் பெருந்தகை’; ‘சித்தாந்த கலாநிதி’, ‘உரைவேந்தர்’ முதலான பெரும் புகழ் பெற்றமைக்கு அடித்தளமாக அமைந்தது கரந்தைத் தமிழ்ச் சங்கமே எனில், மிகையன்று!

இல்லறம் ஏற்றல்

உரைவேந்தர்தம் வாழ்க்கைத் துணைவியாக வாய்த்தவர், உலோகாம்பாள் ஆவார். கோட்டுப்பாக்கம் (காவேரிப்பாக்கம்) என்ற ஊரில் வாழ்ந்த அண்ணாபிள்ளை - இலட்சுமி ஆகியோரின் முதல் மகள்! வள்ளுவர் மொழிந்த ‘வாழ்க்கைத் துணைநலம்’ என்பதற் கேற்ப, உரைவேந்தருக்கு எல்லா வகையானும் நலமாக அமைந்தவர். அதனால்தான், உரைவேந்தர் எவ்விதக் கவலையு மின்றித் தமிழை ஆராய்வதிலும், ஆசிரியப்பணி ஆற்றுவதிலும், மிகப்பெரிய மாநாடு, அல்லது கூட்டங்களில் தலைமை தாங்கிப் பேருரை அல்லது சொற்பொழிவு செய்வதிலும் ஓர் இம்மியளவும் தவறாமல், கடமை யாற்ற முடிந்தது; பெரும்புகழும் பெற முடிந்தது.

இவ்விருவர்தம் இல்லறப் பயனாய்ப் பெற்ற மக்கள் பதினொரு பேராவர்.