பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பேராசிரியப் பெருந்தகை

25

"ஏற்ற ஆசிரியரை எய்தப் பெறாமல் ஏக்கமுற்றிருந்த யான், ஊக்கம் பெற்று அவரை(உரைவேந்தர்) நேரில் ஆய்ந்தறியத் தொடங்கினேன். அவர், பிறரோடு பழகும் பண்பையும், பள்ளியில் பாடம் நடத்தும் பாங்கையும் கவனித்தேன். உரையாற்றும் அவைகட்குச் சென்று, அவர் சொற்பொழிவுகள் பலவற்றைக் கேட்டேன். நான் எதிர்பார்த்த தகுதிகள் யாவும் அவரிடம் ஏற்றமுற நிறைந்திருப்பன கண்டு, என் தமிழ்ப் பசியைத் தணிவிக்கும் தகவுடையார் அவரே எனத் தெளிந்து, அவரை அணுகி என் விருப்பத்தைக் கூறி வேண்டிக் கொள்ளத் துணிந்தேன்!”

என்று கூறுபவர், 37 அடிகள் கொண்ட பாடலையும் எழுதி உரைவேந்தரின் இல்லத்திற்குச் சென்றார். வீட்டு வெளித் திண்ணையில் புத்தகக் குவியல்களுக்கிடையே, சிறிய சாய்வு மேசை முன் அமர்ந்து, ஏதோ குறிப்பெடுத்துக் கொண்டிருந்தவரைக் கண்டு வணங்கித் தாம் தமிழ் கற்க விரும்புவதாகக் கூறினார். உரைவேந்தரும் அவரின் தகுதியையும் உணர்ச்சியையும் வேட்கை விருப்பத்தையும் அறிந்து பாடம் சொல்ல இசைவளித்தார். முறையாகத் தமிழ் பயின்று சென்னைப் பல்கலைக்கழக வித்துவான் தேர்வெழுதி, முதல்வகுப்பில் மாநிலத்தில் இரண்டாமவராகத் தேர்ச்சி பெற்று, உயர்நிலைப் பள்ளித் தலைமைத் தமிழாசிரியராக ஏறத்தாழ முப்பது ஆண்டு பணிபுரிந்தார்.

"இந்நிலைக்கு என்னை உருவாக்கி, வழிகாட்டி, வாழவைத்த வள்ளல் பிள்ளையவர்களேயெனின், அவர் பெருமைக்கு வேறு சான்று வேண்டுவதில்லை" என்கின்றார் ம.வி. இராகவன்.

இவ்வாறே உரைவேந்தரிடம் தமிழ்பயின்று வித்துவான் ஆகிப் பின்னர்த் தமிழ் முதுகலை முதலான பட்டம் பெற்றுத் தமிழகச் சட்டமன்றப் பேரவைத் தலைவராகப் பெருமை பெற்றவர் கா. கோவிந்தனாவார். சங்ககால அரசர் வரிசை, சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை முதலான பன்னூல்கள் எழுதியவர். பி.டி.சீனிவாச அய்யங்கார் எழுதிய 'தமிழர் வரலாறு'(History of Tamil) என்ற ஆங்கில நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் என்பதோடு அவர் எழுதிய தவறான முடிபுகள் சிலவற்றைத் தக்க சான்றுகளுடன் மறுத்து, அந்தந்த அதிகாரங்களின் பின்னிணைப்பாகத் தமது கருத்தைத் தந்தவர். இவ்வாறே