பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நூலாசிரியர்

53

பதிப்பாசிரியராகக் கொண்டு, திருவருட்பா 6 திருமுறைகளையும் திருந்திய பதிப்பாக வெளியிட்டுள்ளார். தேனினும் இனிய இத்திருவருட்பாப் பாடலின் செம்பொருள் நுட்பங்களைத் தமிழ் இலக்கண இலக்கிய வரம்பினை உளங் கொண்டு, நுண்ணிதின் ஆராய்ந்து வெளிப்படுத்தும் முறையில் திருவருட்பாவுக்கு உரைகாணும் திட்டமொன்று இவரால் வகுக்கப்பட்டது. இவ் உரைப் பணியைச் சிறப்பாகச் செய்து முடிக்க முற்றிலும் தகுதிபடைத்தவர் உரைவேந்தரே எனத் தேர்ந்து, கோவை சக்தி அறநிலையத்தின் சார்பில், பல்கலைக் கழக மூலமாகத் திருவருட்பா முழுமைக்கும் விளக்கவுரை காணச் செய்த பெருமை நா.மகாலிங்கனாருக்கு உண்டு.

உரைவேந்தர் எழுதிய திருவருட்பா உரைநூலின் முதற்பகுதி 582 பக்கம் கொண்டது; இவ்வாறே ஏனைய 5 பகுதிகளுமெனில் உரைப் பெருக்கத்தின் மாண்பை ஓரளவு அறிதல் கூடும். பாடல் தலைப்பு: யாப்பு இன்னதென்பது: பாடப்பெற்ற தலம் ஆகியனவற்றை முதற்கண் கூறிப் பின்பு, ‘பாடல்-உரை- பெரியதோர் விளக்கம்’ என அமைத்துக் கொண்டார் உரைவேந்தர்.

வரலாற்று நூல்கள்

உரைவேந்தர் பல்துறை அறிவினர். ஆங்கில அறிவு, கல்வெட்டு ஆய்வு ஆகியன, இவர்தம் வரலாற்று நூல்கட்குப் பெரிதும் துணைபுரிந்தன. இவ்வகையில் இவர் எழுதியன, சைவ இலக்கிய வரலாறு, சேரமன்னர் வரலாறு, தமிழ் நாவலர் சரிதை மூலமும் உரையும், வரலாற்றுக் காட்சிகள் ஆகியன குறிப்பிடத் தக்கன.

சைவ இலக்கிய வரலாறு (கி.பி. 7 முதல் 10ஆம் நூற்றாண்டு வரை): இஃது அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடாக 1978இல், வந்தது.

தமிழ்மொழி வாயிலாகத் தமிழர்கள் போற்றி வளர்த்த- பேரறிவு நிறைந்த இலக்கியம் பற்றியும், புலவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றியும், அவர்கள் வாழ்ந்தகாலம், அரசியல் நிலை, சமயநிலை, சமுதாய வாழ்வு, கலை வளர்ச்சி முதலியன பற்றியும், தக்க அறிஞர்களைக் கொண்டு ஆராய்ந்து, தமிழ் இலக்கிய வரலாற்றினை எழுதி வெளியிடுதல், தமிழ் வளர்ச்சிக்குரிய சிறந்த பணிகளில் ஒன்றாகும். இதன் தேவையை நன்குணர்ந்த பெருந்தகை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிறுவிய கொடை வள்ளல் அண்ணாமலை அரசராவர்! அவர்தம் நோக்கத்தை நிறைவேற்றும்