பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4

உரைநயம் கண்ட உரவோர்

“பழைய உரைகள் பொழிப்புரைகளாக உள்ளன. நீண்ட தொடர்களாக அமைந்துள்ளன. அவற்றை எளிதில் மனங்கொள்வது அரிய முயற்சியாகும். எனவே பாட்டைத் தொடர் தொடராகப் பிரித்து, அத் தொடருக்குரிய பழைய உரையைப் பொருத்திப் பாட்டுப் பொருளை எளிதாக மனம் பற்றுமாறு செய்கிறார். பாட்டின் சொற்புணர்ச்சிகளில் அமைந்த வினை முடிபுகளைச் சுட்டி, பொருளின் திட்பத்தையும் நுட்பத்தையும் உணர்த்துதல், அருஞ் சொற்களுக்குப் பொருள் கூறுதல், பிற நூல்களிலிருந்து ஒப்புமை காட்டுதல், இலக்கண அமைதியைப் புலப்படுத்துதல், வரலாற்றுச் செய்திகளைத் தொடர்புபடுத்தல் முதலான அரிய செய்திகள் பலவும் ஒளவை நூல்களில் காணப்படுவன!”

என்று பேராசிரியர் கு.சிவமணி குறிப்பிடுவார்.

இக்கூற்றுக்கு ஏற்ப, எந்த ஒரு நூலாயினும் அதற்குச் சிறந்த முறையில் உரைகாணும் திறம், உரைவேந்தருக்குக் கருவிலே வாய்த்த திரு எனலாம். இலக்கிய நூலாயினும், இலக்கண நூலாயினும் அதன் பண்டை உரைகளை ஆழ்ந்து பயின்று, தோய்ந்து, நுகர்ந்து, ஆய்ந்து தெளிந்தார். பிறர் கருத்தோடோ தம் கருத்தோடோ மாறுபட அமைந்திருக்கும் உரையை, உடனே ‘பிழையுரை’ என்று முடிவு செய்து விடாமல், அவர் அவ்வாறு உரை வகுத்திருப்பதற்கான காரணத்தைக் கண்டறிந்தார். பொருந்தா தாயின் புத்துரைகாண முயன்றார்.

உரைவேந்தர் நூல்களில் காணப்படும் ‘உரைத் திறன்கள்’ பலவாகும். இங்கே சில மட்டும் எடுத்துக் காட்டப்படுகின்றன.