பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உரைநயம் கண்ட உரவோர்

69


நெல்லையில் 12-2-1956இல், நடந்த ‘பதினெண் கீழ்க் கணக்குச் சொற்பொழிவு’த் தலைமையுரையில் உரைவேந்தர், ‘புத்திரமுக தரிசனம்’ என்பது குறித்துப் பின்வருமாறு விளக்கம் தருகின்றார்:

“சங்க காலத்தில், இல்லிருந்து நல்லறம் புரியும் மக்கள் வாழ்வில், மனைக்கிழத்திக்கு மகன் பிறந்தானாயின் குறித்த நாள் ஒன்றில் தலைமகன், தன் மகனைக் காண்டல் ஒரு சிறப்பாக நிலவிற்று. அதியமான் நெடுமான் அஞ்சி, தனக்கு மகன் பிறந்தானைக் காணப்போந்த காட்சியை ஔவையார் வியந்து பாடியது புறநானூற்றில் சேர்க்கப்பட்டிருக்கிறது. மகனைத் தோளிடைக் கொண்டு நிற்கும் தந்தையின் தோற்றத்திற்கு இந்திரனை உவமமாக்கி, ‘தடுத்த மாநிதிக் கிழவனும் போன்மென மகனொடு புகுதந் தோனே’ (அகம்: 66) என்று அகநானூறு கூறுகின்றது. “இவ்வழக்காறு, ‘புதல்வற் பயந்த புனிறுதீர் பொழுதின்... ஐயர் பாங்கினும், அமரர்ச் சுட்டியும் செய் பெருஞ்சிறப்பொடு சேர்தல்’ (தொல். பொருள். 146) எனத் தொல்காப்பியனார்க்கு முன்பிருந்தே தொன்றுதொட்டு வருவதாயினும், இக்கீழ்க் கணக்குப் பாடிய சான்றோர் காலத்தும் இருந்த தனை, ‘பாட்டரவம் பண்ணரவம்’ (திணை மாலைநூற்.145) என்று குறிக்கின்றனர். “பிற்காலத்தே இவ்வழக்காறு, ‘புத்திரமுக தரிசனம்’ என வழங்கியது, இதனைத் திருமயம் பகுதியைச் சேர்ந்த நெக்கோணத்திலுள்ள பெருமாள் கோயில் கல்வெட்டு, (கி.பி. 1483) வீரப்பிரதாப சுந்தரத் தோளுடையார் மகாபலி வாணாதிராயர், தன் மகன் திருமாலிருஞ்சோலை நின்றான்’ பிறந்த காலத்தே ‘புத்திரமுக தரிசனம்’ என்னும் இம்முறையைச் செய்தான் என்று (P.S.No.672) குறிக்கின்றது!”

இவைபோல் அரிய செய்திகளைத் தருவதில் உரைவேந்தருக்கு ஆரா இன்பம்!