பக்கம்:இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

Corporeal Organs) என்று அவர் அழைக்கிறார். இவை ஆரம்பத்தில் மிக எளிய கருவிகளாக இருந்தன. ஒரு முறிந்த மரக்கிளை, கூர்மையாக்கப்பட்ட கல் இவை போன்றவை தாம் மனிதன் பயன்படுத்திய பண்டைக் கருவி.” கருவிகளைச் செய்யும் ஆற்றல் மூளையின் திறத்தால் மனிதனிடம் வளர்ச்சியடைந்தன. இச்சிறு கருவியைச் செய்த மனிதன், தனது உழைப்பால், இன்று விண்கலங்களை கோடிக்கணக்கான மைல்களுக்கு அப்பால் அனுப்புகிறான். அவை கோடிக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள விண்கோளங்களை படம் பிடித்து உடனே சில ஒளிக்கதிர்கள் மூலம் உலகிற்கு அனுப்புகின்றன. இவ்வளவு தூரத்தில் உள்ள கோளங்களின் படங்கள், மனிதன் அவற்றைக் கண்ட மறுநாளே தினசரிகளில் வெளியாகின்றன. இன்று மனிதன் தனது உடலுழைப்பாலும், மூளை உழைப்பாலும், இயற்கையாற்றல்களில் பல கூறுகளை தனது தேவைகளுக்காக வென்றுள்ளான்.

இவ்வாறு இயற்கையோடு போராடக் கருவிகளைச் செய்து உற்பத்திச் சக்திகளை முன்னேற்றிய மனிதன், விஞ்ஞானத்தை வளர்த்தான். பொருள் உற்பத்தியில் முன்னேறிய மனிதன் தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாதபோது பல நம்பிக்கைகளையும் படைத்தான். அவனது உற்பத்தி அமைப்பு முறையின் வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் சில நம்பிக்கைகள் தோன்றின.

பொருள் உற்பத்தி அமைப்பை (சமூக அமைப்பு) மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம். வர்க்கங்கள் தோன்றுவதற்கு முற்காலம் (இனக் குழுக்காலம்), வர்க்கப் பிரிவினையுள்ள காலம் (வர்க்க சமுதாய காலம்), வர்க்கங்கள் இல்லாத காலம் (வர்க்க பேதங்கள் அகன்ற காலம்) என்று இச்சமூக வளர்ச்சிக் கட்டங்களைப் பகுக்கலாம்.

வர்க்க முற்காலத்தின் உற்பத்திச் சக்திகள் மிகவும் தாழ்ந்த நிலையில் இருந்தன. இந்தக் காலகட்டத்தில் ஒரு மனிதன் உழைப்பை வேறோர் மனிதன் சுரண்ட இயலாது. ஏனெனில் உழைப்பினால் விளையும் பொருள் உற்பத்தி சமூகத்தின் வாழ்க்கையை நடத்துவதற்கே போதாது. எனவே பட்டினியையும் பற்றாக் குறையையும்தான் சமூக

39