பக்கம்:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிஞர் அண்ணா

7


யிருப்பதற்குக் காரணம் இந்தி மொழியைவிட தமிழ்மொழி சிறந்தது என்று வாதாடுவதற்கல்ல. தமிழ் நாட்டிலே இந்தி மொழி திணிக்கப்பட்டால் அதை எந்த முறையிலே ஒழித்துக்கட்டுவது; எந்த வழியிலே அழித்துக்கட்டுவது; அதற்கு நம்முடைய காணிக்கை என்ன? என்று சிந்தித்து அவரவர்கள் தங்கள் காணிக்கைகளைச் சேர்ப்பிப்பதற்காக இங்கு கூடியிருக்கிறார்களே தவிர வெறும் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக அல்ல.

1937-ல் அருணகிரிநாதர் அவர்கள் சொன்னபடி நான் வாலிபனாக இருந்தேன். என்னோடு இன்றைய தினம் வாலிபர்களாக உள்ளவர்களில் பலபேர் அன்று தத்தி விளையாடும் பிள்ளைப் பருவத்திலிருந்தார்கள். ஆனால் இன்றைய தினம், 1937-லே கிடைத்திராத ஆதரவு நமக்குக் கிடைத்திருக்கிறது. 37-லே நமக்கு கிடைக்காத பெருந்துணைகள் 57-ல் கிடைத்திருக்கின்றன. 37-ல் வாலிபனாக இருந்த அண்ணாதுரை 57-ல் நடுத்தர வயதினனாக ஆகியிருக்கின்றான். அன்று பிள்ளைகளாயிருந்தவர்கள் இன்று வாலிபர்களாகியிருக்கின்றார்கள். இப்படிப்பட்ட அளவுக்கு தனிப்பட்ட ஆட்கள் வளர்ந்திருப்பது மாத்திரம் அல்ல; தமிழருடைய உணர்ச்சியும் அந்த அளவுக்கு நன்றாக வளர்ந்திருக்கின்றது. தமிழர் வளர்ந்திருப்பது தெரிந்தும் வடநாட்டார் இன்றையத்தினம் வம்புக்கு வருகிறார்கள் என்றால் உங்களையும் என்னையும் நம்மைப் படைத்த தமிழ் நாட்டையும், தமிழ்நாட்டுக்கு உயிர்நாடியாக இருக்கின்ற தமிழ்மொழியையும் துச்சமென்று அவர்கள் கருதுகின்றார்கள். நீங்கள் எவ்வளவு வளர்ந்தாலென்ன? கவலையில்லை; 2,000 கிளைக்கழகங்களா? வைத்துக் கொள்ளுங்கள்; 2 லட்சம் உறுப்பினர்களா? இருக்கட்டுமே; நாள் தவறாமல் பொதுக்கூட்டங்களா? கேள்விப்படுகிறோம்; ஊர் தவறாமல் மாநாடா? பார்த்துக்கொண்டிருக்கிறோம். உங்களுடைய இயக்கத்திலே பத்திரிக்கைகள் பல இருக்கின்றனவா இருக்கட்டும் – இருக்கட்டும்; உங்கள் இயக்கத்திலே அழகாகப் பலர் பேசுகின்றார்-