36
இந்தி எதிர்ப்பு ஏன்?
“ஆங்கிலத்தைப் பற்றிப் பேசுகின்ற நேரத்தில் சில தேசீய தோழர்கள் தங்களுடைய தேசீயம் முற்றிவிட்ட காரணத்தினாலே என்று நான் கருதுகிறேன் — சொல்லுகின்றார்கள் — ‘ஆங்கிலம் அன்னிய மொழி, ஆகவே ஆங்கிலம் ஆகாது’ என்று “அன்னியருடைய வழிகளெல்லாம் நமக்குத் தேவையில்லை யென்றால், இரயில் அன்னியன் கொடுத்ததுதான்: கார்டு – கவர்களை அன்னியன் காலத்திலே தான் பார்த்தோம்: தபால் தந்தி அன்னியன் காலத்தில்தான் கிடைத்தது: ஆபரேஷன் இஞ்செக்ஷன் அன்னியன் காலத்தில் வந்தவைதான். இவைகளெல்லாம் இருக்கலாம் — ஆனால், அவர்களுடைய மொழி மட்டும் இருக்கக்கூடாது என்று எடுத்துச் சொல்லுவது எந்த வாதம் என்பது எனக்குப் புரியவில்லை.
“ஆகையினாலே தான், ஆங்கிலத்தை அன்னியமொழி என்று கருதாமல், அன்னியரோடு தொடர்பு படுத்துகின்ற மொழி அன்னியர்கள் என்றால் உலகத்திலிருக்கின்ற அத்தனை அன்னியர்களோடும் தொடர்புபடுத்துவதற்கு ஆங்கிலம் ஒன்று இருந்தால் போதும் என்ற காரணத்தினாலே, ஆங்கிலத்தைத் தொடர்பு மொழியாகவும், தாய்மொழியை நம்முடைய ஆட்சி மொழியாகவும், அலுவல் மொழியாகவும், அற மன்றத்திலே இருக்கத்தக்க மொழியாகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும்: சர்க்கார் ஏற்றுக் கொண்டிருக்கின்றதென்றாலும், அதை வெற்றிகரமாக்க வேண்டுமென்ற தீர்மானம் இங்கே எழுதப்பட்டிருக்கிறது.
“நாமெல்லாம் ஒரு ஜனநாயக அம்சத்துக்குக் கட்டுப்பட்டவர்கள்: நானோ, அருணகிரி அடிகள் அவர்களோ, அல்லது மற்றவர்களோ, இங்கே எவ்வளவு தான் எடுத்துச்சொன்னாலும், நம்முடைய தி. மு. கழகம் எப்படியெப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதை எடுத்துச் சொல்ல அருகதை பெற்றவரும், அதிகாரம் பெற்றவரும் நம்முடைய நாவலர் பொதுச் செயலாளர் நெடுஞ்செழியன் அவர்கள்தான் என்ற