பக்கம்:இந்தி பொது மொழியா.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இந்தி' பொது மொழியா?

15


விளைந்திடக்கூடும் ? இவ்வியல்புகளை யெல்லாம் நடு நின்று எண்ணிப்பார்க்கவல்ல அறிஞர்க்கு, இத்தென் னாட்டவர்கள் தமக்கு எவ்வகையிலும் பயன்படாததுந் தெரியாததுமான இந்தி மொழிகளில் ஒன்றை வருந்திக் கற்றலால் வீண் காலக்கழிவும் வீண் உழைப்பும் வீண் செலவும் உண்டாகுமே யல்லாமல் வேறேதொரு தன்மையும் உண்டாகாதென்பது நன்கு விளங்கும். இனி, இத்தென்னாடு முழுதும், இலங்கை, பர்மா, மலாய் நாடு, தென்னாப்பிரிக்கா முதலான அயல் நாடு களிலும் பெருந்தொகையினராய் இருக்குந் தமிழ் மக்கள் எல்லாரும் பேசுந் தமிழ்மொழி ஒரே தன்மையின தாய், இந்நாட்டவ ரெல்லாரும் ஒருவரோ டொருவர் உரையாடி அளவளாவு தற் கிசைந்த ஒரே நிலையின தாய் வழங்கா நிற்க, வட நாட்டின்கட் பேசப்படும் இந்தி, உருது முதலான மொழிகளும் அவற்றின் உட்பிரிவான பல சிறு சிறு மொழிகளும் பலப் பல மாறுதல்கள் வாய்ந்தனவாய், ஒருவர் பேசுவது மற்றொருவர்க்குப் புலனாகா தபடி திரிபுற்றுக் கிடப்பது. ஏனென்றால், அவ்விருவேறியல்பு களையுஞ் சிறிது விளக்குவாம். தமிழ்மொழி பேசுந் தமிழ் மக்கள் விந்திய மலைக்குத் தெற்கேயுள்ள இத் தென்னாட்டிலும், இதற்குத் தெற்கே யிருந்து பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னே கடலுள் அமிழ்ந்திப் போன குமரிநாட்டிலும் நாகரிகத்திற் சிறந் தோங்கிய வாழ்க்கையில் இருந்தவர்கள். இற்றைக்கு ஐயாயிர ஆண்டுகளுக்கு முன்னே தொட்டுத் தமிழ் மொழியை நன்குகற்ற ஆசிரியர்கள் முதுகுருகு, முதுநாரை, களரியாவிரை, பெரும்பரிபாடல், தொல்காப்பியம், பெருங்கலித் தொகை, குருகு, வெண்டாளி, வியாழமாலை, முத்தொள்ளாயிரம், நற்றிணை, நெடுந்தொகை, அகநானூறு, புறதானூறு, ஐங்குறுநூறு, குறுந்தொகை, சிற்றிசை, பேரிசை, பதிற்றுப்பத்து, எழுபதுபரி பாடல், குறுங்கலி, திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, திருவாசகம், திருக்கோவையார், சீவகசிந்தாமணி, திருத்தொண்டர்