________________
during 5 புனா ஒப்பந்தம்: ஒரு சோகக் கதை - மதுரை நகரத்தின் தெருக்களிலும் பேருந்துகளிலும் 1992 செப்டம்பர் மூன்றாம் வாரத்தில் தாழ்த்தப்பட்ட - மக்களின் அமைப்பொன்றின் சார்பில் சுவரொட்டி ஒன்று காணப்பட்டது. படுபாதகன் காந்தி புனா ஒப்பந்தத்தின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களைக் கழுத்தறுத்த நாள் செப்டம்பர் 24" ) என்பது அந்தச் சுவரொட்டியின் வாசகம் ஆகும். பொதுமக்கள், அரசியல்வாதிகள், காவல்துறையினர் ஆகியோரை மட்டுமின்றி வரலாற்று உணர்வு உடையவர்களையும் வரலாற்றுக் கல்வித்துறை சார்ந்தவர்களையும் அந்தச் சுவரொட்டியின் சொற்கள் அதிர்ச்சியடையச் செய்தன. புனா ஒப்பந்தம் 1932ல் ஏற்பட்டு, அறுபது ஆண்டுகள் கழித்து ஒப்பந்தத்திற்குக் காரணமானவர்கள், கையெழுத்திட்டவர்கள் அனைவரும் இறந்து போன பின்னர் அந்த ஒப்பந்தம் கடுமையான சொற்களால் விமர்சனம் செய்யப்படுகிறது. ஒரே நூற்றாண்டுக்குள் முதல் தலைமுறையினர், ‘மிகப் பெரிய அரசியல் சாதனை' என்று கொண்டாடியதை அடுத்த தலைமுறையினர் இத்தனை அளவு குறைத்து மதிப்பிட முடிந்தது எப்படி? ஒரு தலைமுறைக் காலத்திற்குள் (30 ஆண்டுகள்) நடந்த தலைகீழ் மாற்றத்திற்கான காரணம் என்ன? இந்தச் சுவரொட்டிக்கு மாற்றாக, இந்தச் சுவரொட்டியால் தாக்கப்பட்ட தேசிய இயக்க அரசியல்வாதிகள்(ஒரு காலத்தில் தேசிய இயக்கத்தில் இருந்து இப்பொழுது பல பெயர்களில் தேசிய அரசியல் கட்சிகளாகப் பிரிந்து நிற்பவர்கள்) ஏன் மாற்றுக் கருத்துக்களை முன் வைக்கவில்லை? இந்த கேள்விகளுக்கான விடையாக புனா ஒப்பந்தம் எழுந்த சூழ்நிலையினையும் அதன் பின் விளைவுகளையும் வரலாற்று உணர்வுடன் காண முற்படுவதே இச்சிறு வெளியீட்டின் நோக்கமாகும்.