________________
. தொ.பரமசிவன் 119 நியமிக்கப்பட்டவர்கள் அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். திரு.காந்தி அவர்களின் அல்லது அவர் யாருடன் பேச்சு வார்த்தையை மேற்கொள்ள விரும்புகிறாரோ அந்தக் கட்சிகளின் பிரதி நிதித்துவத்தன்மை எதுவாயிருப்பினும் அவர்கள் எங்களைக் கட்டுப்படுத்தும் நிலையில் நிச்சயம் இல்லை, நிச்சயமாக இல்லவே இல்லை. இக்கூட்டத்தில் இதனை மிகவும் ஆணித்தரமாகக் கூறிக் கொள்கிறேன்.' மீண்டும் செப்டம்பர் 8ஆம் நாள் கூடிய சிறுபான்மைக் குழு கூட்டத்தில் இந்த இடைப்பட்ட காலம் பயனற்றுப் போய்விட்டதென்றும் தன்னுடைய முயற்சி தோல்வியடைந்து விட்டதென்றும், அதற்காகத் தான் வருந்துவதாகவும் காந்தியடிகள் கூறினார். இந்த எட்டு நாட்களுக்குள் நடந்தவையாக டாக்டர்.அம்பேத்கார் இந்தியாவிற்கு வந்த பின்னர் கூறிய செய்திகள் வரலாற்று மாணவர்க்கு அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தக் கூடியனவாகும். 'இந்தக் கால இடைவெளியில் காந்தியடிகள் முஸ்லீம்களோடு ஒரு உடன்பாட்டிற்கு வர முயன்றார். குறிப்பாக டாக்டர் ஆகாகானை பலமுறைச் சந்தித்தார். 'முஸ்லீம்களின் 14 கோரிக்கைகளையும் காங்கிரசு ஏற்றுக் கொள்ளும். தாழ்த்தப்பட்டவர்களின் தனித் தொகுதி கோரிக்கையினை முஸ்லீம்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது' என்று ஒரு ஒப்பந்தம் செய்ய முயற்சி எடுத்தார்." இவையே காந்தியடிகள் மீது அம்பேத்கார் சுமத்திய கடுமையான குற்றச்சாட்டுகள் ஆகும். காங்கிரசுக்கும் முஸ்லீம் பிரதிநிதிகளுக்கும் இடையே ஏற்பட இருந்த ஒப்பந்த நகலை எட்டு ஆண்டுகள் கழித்து 1939இல் பாகிஸ்தான் மீதான சிந்தனைகள் Thoughts on Pakistan புத்தகத்தின் பிற்சேர்க்கையாக அம்பேத்கார் வெளியிட்டார். தேசிய இயக்கத்தவர்கள் யாரும் அதற்கு இன்றுவரை மறுப்புத் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும். 1931 செப்டம்பரில் கூடிய இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் (அல்லது வட்டமேசை மாநாட்டின் இரண்டாவது சுற்றில்) எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மாநாட்டின் இறுதியில் பிரிட்டன் பிரதமர், 'பிரதமர் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம். என்ற எழுத்து உறுதி மொழியினை மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரிடமும் கேட்டுப் பெற்றார். தாழ்த்தப்பட்டோர் பிரதிநிதிகளான டாக்டர்.அம்பேத்காரும் ரெட்டமலை சீனிவாசனும் அப்படியொரு உறுதிமொழியை எழுத்தில் கொடுக்காமலேயே இந்தியா திரும்பி விட்டனர்."