பக்கம்:இந்து தேசியம்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

124 'இந்து' தேசியம் இதற்கிடையில் பம்பாய் நகரத்தில் அம்பேத்காரின் பழைய நண்பரான அம்ரித்லால் தக்கர் (தக்கர் பாபா) அம்பேத்காரை அடிக்கடி சந்தித்து காங்கிரசு சார்பாக பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தார். காந்தியடிகள் உண்ணாவிரதம் தொடங்கிய செப்டம்பர் 20 செவ்வாய்க்கிழமையன்றே, பம்பாயில் இந்துத் தலைவர்களுடைய மாநாடு பிர்லா மாளிகையில் கூடுவதாக இருந்தது. பண்டித மதன்மோகன் மாளவியா, சர்.தேஜ் பகதூர் சாப்ரு, காங்கிரஸ் தலைவர் இராஜாஜி, சர்.சுநிலால் மேத்தா, சர்.புருஷோத்தம் தாஸ் தாகூர் தாஸ், சேட் மதுராதாஸ் வாசன்ஜி, ஜி.டி.பிர்லா, எம்.ஆர்,ஜெயகர், டி.பிரகாசம், மூஞ்சே, பாபு இராசேந்திர பிரசாத் ஆகியோர் பம்பாய் நகர் வந்து சேர்ந்தனர். இந்தத் தலைவர்களை டாக்டர் அம்பேத்காரும், சோலங்கியும் சந்தித்துப் பேசினர். காந்தியடிகள் உண்ணாவிரதம் இருந்த ஆறு நாட்களில் நடந்த நிகழ்ச்சிகளை, எரவாடா சிறையில் அவருக்கு அருகிலேயே இருந்து நேரில் கண்டவரான அவரது பணியாளர் பியாரிலால், தன்னுடைய நூலில் 42 பக்கங்களில் தந்து இருக்கிறார். அவர் தரும் செய்திகளைத் தொகுத்துக் காண்பது புனா ஒப்பந்தம் ஏற்பட்ட முறையினை விளங்கிக் கொள்ள மேலும் உதவும். விச 20.09.1932 செவ்வாய் முற்பகல் 11.30 மணிக்கு வெந்நீரில் சிறிது எலுமிச்சைச் சாறும் தேனும் கலந்து காந்தியடிகள் பருகினார். 12.00 மணியிலிருந்து அவரது உண்ணாவிரதம் நடைமுறைக்கு வந்தது. மறுநாள் 21ஆம் தேதி அவர் சிறைக்குள் தனிப்பிரிவுக்கு மாற்றப்பட்டார். சர்தார் வல்லபாய் பட்டேலும் காந்தியடிகளின் செயலாளர் மகாதேவ தேசாயும் அவரது அருகில் இருந்தனர். பெண்கள் சிறையில் இருந்த சரோஜினி நாயுடு தனிப்பிரிவுக்கு கொண்டு வரப்பட்டு காந்திக்கு உதவி செய்து கொண்டு இருந்தார். மறுநாள் 22ஆம் தேதி சபர்மதி சிறையில் இருந்த கஸ்தூரிபாய் காந்தி, கணவருக்கு உதவி செய்ய எரவாடா சிறைக்குக் கொண்டு வரப்பட்டார். 20ஆம் தேதி அன்றே இந்து மிதவாதக் கட்சித் தலைவர்களும் பம்பாய் நகரத்தில் பிர்லா மாளிகையில் அம்பேத்காருடன் பேச்சு வார்த்தையைத் தொடங்கி வைத்தனர். சர்.தேஜ் பகதூர் சாப்ரு இதில் முன்னணியில் இருந்தார். இங்கிலாந்து பிரதமர் அளித்ததை விட அதிகமான தொகுதிகளை அளிக்க மேற்குறித்த தலைவர்கள் தங்கள் இசைவைத் தெரிவித்தனர். அன்று மாலை இரண்டு மணி நேரத்தில் தானொரு திட்டத்தோடு வருவதாகச் சொல்லிவிட்டு அம்பேத்கார் சோலங்கியோடு அவ்விடத்தை விட்டு சென்றார். பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்த தலைவர்களுக்கு காந்தியடிகள் தங்கள் திட்டத்தை ஏற்பாரா என்ற ஐயப்பாடு ஏற்பட்டு புனா வந்து சேர்ந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/125&oldid=1669814" இலிருந்து மீள்விக்கப்பட்டது