பக்கம்:இந்து தேசியம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16 'இந்து' தேசியம்

நிற்க. இக்கட்டுரை வட்டமேஜை மாநாட்டைத் தொடர்ந்து பிரிட்டிஷ் அரசு அறிவித்த இத்தனித் தொகுதி முறைக்கு எதிராக காந்தியார் நடந்துகொண்ட முறையையும், அவரது மாயவலையில் விழுந்த எம்.சி. ராஜா போன்ற தாழ்த்தப்பட்டோர் இயக்கத் தலைவர்கள் இக்கோரிக்கைக்கு எதிராக செயல்பட்ட அவலத்தையும் விரிவாக்க அலசுகிறார். அதுபோலவே, தாழ்த்தப்பட்டோர் மட்டும் வாக்களித்துத் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கருத்து ஜே.எஸ். கண்ணப்பர் ஆசிரியராக இருந்த நீதிகட்சியின் 'திராவிடன்' இதழில்தான் முதன்முதலில் முன்வைக்கப்பட்டது என்ற ஒரு தகவலையும் சுட்டிக்காட்டியுள்ளார் தொ.ப.
மேலும் பின்னாளில் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வி.வி.கிரி, 1957...தேர்தலை தோற்றதன் பின்னர் தொடுத்த வழக்கின் காரணமாக, புனா துரோக ஒப்பந்தத்திற்குப் பின்னரும் தொடர்ந்துவந்த தனித் தொகுதி முறை 1962 தேர்தலின்போது எவ்வித எதிர்ப்பும் இன்றி இரட்டை உறுப்பினர் தனித் தொகுதிமுறை கைவிடப்பட்ட அவலத்தையும் விளக்குகிறார்.
எழுதப்பட்ட கட்டுரைகளின் சிறப்புகள் ஏராளம், அவற்றை விட, எழுதப்பட்ட கட்டுரைகளில் பொதிந்துள்ள செய்திகள், அது எந்த அளவு இன்றைய காலச்சூழலுக்குத் தேவை என்பதைத்தான் நாம் ஆழ்ந்து பார்க்க வேண்டியுள்ளது.
இந்நூல் தரும் செய்திகளைக் கருத்தோடு கற்பதும், அதன் வழியே பெற்ற கருத்துக்களை இந்நூலைப் பரப்புவதன் வழியாக பரவலாக எடுத்துச் செல்வதும், அதை நடைமுறை நிகழ்வுகளோடு பொருத்திப் பார்ப்பதன் வழியாக 'இந்துத்துவ' கருத்தியல்களின் கேடுகளை உணர்வதும், உணர்ந்ததைத் தொடர்ந்து ‘சுயமரியாதை உலகு அமைய உழைப்பதுமே இந்நூலை ஆக்கித் தந்த தோழர் தொ.ப அவர்களுக்கும், ஆர்வத்துடன் வெளியிடும் 'கலப்பை பதிப்பகத்தாருக்கும் நாம் ஆற்றும் நன்றிக் கடனாகும்.


11.06.2015
மேட்டூர் அணை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/17&oldid=1674026" இலிருந்து மீள்விக்கப்பட்டது