பக்கம்:இந்து தேசியம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொ.பரமசிவன் 43

கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். அதனால்தானே 183 வங்கிக் கணக்குகள் வைத்திருக்கிறார்கள். காஞ்சிமடம் மட்டும் பொன்னும் பொருளுமான கரணிக்கைகளால் தன்னுடைய வருவாயைப் பெருக்கிக் கொண்டே வந்தது. குறிப்பாக, காஞ்சிமடம் தமிழ்நாட்டுக்கு வெளியிலேயும் இந்தியாவுக்கு வெளியிலேயும் பணக்காரர்களிடமிருந்து நிறைய நன்கொடையைப் பெற்றதால் இவர்களுக்கு மட்டும் சொத்து சேர்ந்தது. மற்ற மடங்கள் எல்லாம் சொத்துக்களை இழந்து கொண்டு இருந்தன.

மற்ற மடங்களின் சொத்துடைமை நிலை என்ன?
மற்ற மடங்களுக்கு நகரங்களிலே கட்டடங்கள் உண்டு. கிராமங்களிலே ஏராளமான விளைநிலங்கள் இருக்கின்றன. தருமபுரம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள் ஆகிய மடங்கள் தஞ்சை மாவட்டத்தில் இருந்தால் கூட, நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரத்தில் இம்மூன்றுக்கும் நிறைய விளை நிலங்கள் உள்ளன. இவ்விளை நிலங்களைப் பார்வையிட அங்கங்கே இளைய தம்பிரான்மார்கள் இருப்பார்கள். கட்டடங்களும் நெற்களஞ்சியங்களும் உண்டு. கோயில் சார்ந்த பெருநகரங்களிலே மடத்திற்கான கிளைகள் உண்டு. "யாராவது ஒரு தம்பிரான் இருப்பார். விஜயநகர ஆட்சிக் காலத்திற்குப் பின் நாயக்கர் ஆட்சியிலேதான் பெருங்கோயில்களுக்கு அருகிலேயே சிறிய மடங்கள் வர ஆரம்பித்தன. சிருங்கேரிக்கு மதுரையிலே அம்மன் சன்னதியிலே ஒரு சிறிய மடம் இருக்கிறது. திருநெல்வேலியிலேயே அம்மன் சன்னதியில் ஒரு மடம் இருக்கிறது. ஆனால் காஞ்சி மடத்திற்கு இருக்காது. ஏனென்றால் இது மடமே அல்ல என்பதனாலேதான். இப்பொழுதுதான் தங்களது சொத்துக்களின் பெருக்கம் காரணமாகப் பெரிய நகரங்களிலே ஏதாவது ஒரு இடத்தை வாங்கி மடம் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்குக் கும்பகோணத்தில் இருந்த சிறு கட்டடம் தவிர எந்த ஊரிலும் வேறு சொத்துக்களே கிடையாது. நஞ்சை விளைநிலங்கள் ஒருபோதும் கிடையாது. தமிழ்நாட்டிலே மடம் என்றாலே நிலவுடைமையின் வெளிப்பாடுதானே. இம்மடத்தின் சொத்துக்கள் எப்பொழுது சேர்ந்தது என்பதற்கான அடையாளம் இதுதான்

அப்படியெனில் சைவர்களும் வைணவர்களும் இவரை எப்படி ஒத்துக் - கொண்டார்கள்?
எங்கே ஒத்துக் கொண்டார்கள்? இவர்கள் கையிலே இருக்கிற அரசியல் அதிகாரத்துக்கு பயப்படுகிறார்கள் அவ்வளவுதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/44&oldid=1677722" இலிருந்து மீள்விக்கப்பட்டது